மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள புராதன டிம்பக்டூ நகரிலுள்ள சமாதிகள் அனைத்தையும் அழிக்கும் நடவடிக்கையை, தாங்கள் முடிக்கும் நிலையில் உள்ளதாக, அங்குள்ள ஒரு இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான அன்சர் தீன் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகள் மற்றும் கோடாலிகளைக் கொண்டு இந்த் தாக்குதல்களை நடத்திவரும் அந்தக் குழுவினர், தற்போது அங்குள்ள மிகப் புனிதமான ஒரு பள்ளிவாசலில் கதவையும் தகர்த்துள்ளனர்.
பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்தி யாஹியா பள்ளிவாசலின் கதவை அன்சர் தீன் தீவிரவாதிகள் இடித்துத் தள்ளியுள்ளனர்.
அந்தக் கதவின் மூலமாகத்தான் புனிதர்களின் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு செய்ய முடியும் என்பதும் அந்தக் கதவு இதுவரை திறக்கப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
ஷரியா சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் வராத 90 சதவீதமான சமாதிகளை தாங்கள் அழித்தொழித்துள்ளதாக, அல் கயீதாவுடன் தொடர்புடைய அமைப்பான அன்சர் தீனின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
நிலப்பரப்பிலிருந்து 15 செண்டிமீட்டருக்கும் அதிக உயரத்தைக் கொண்ட அனைத்து சமாதிகளும் தகர்க்கப்படும் எனவும் அந்தப் பேச்சாளர் கூறியுள்ளார்.