கிழக்கு மாகாண சபைக்கு 35 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் 10 இலட்சத்து 33 ஆயிரத்து 749 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் வாக்களிப்பதற்கென 1163 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி அம்பாறை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் 464 வாக்களிப்பு நிலையங்களிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேர்கள் 414 வாக்களிப்பு நிலையங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேர்கள் 285 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்கவுள்ளனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 17 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 14 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 13 பேரும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.