7/12/2012

| |

வட மாகாணசபை தேர்தல் 2013இல்

வட மாகாண சபைத் தேர்தல் இன்னும் ஓராண்டுக்குள் நடத்தப்படும். அனேகமாக நாம் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக நாம் திட்டமிட்ட அடிப்படையில் நெறியாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் ஜனாதிபதி இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்தத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் நாம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.
நாம் எதிர்நோக்கியிருக்கும் பிரதான பிரச்சினையாக இருப்பது வடபகுதி மக்களின் வாக்காளர் இடாப்புகளை தயாரிப்பதாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, புலிகள் அதிகாரத்தில் இருந்த போது அப்பிரதேசங்களில் இருந்து தமிழர் தப்பியோடினர் என்றும் அதேபோல் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் அங்கிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் 2009ம் ஆண்டு மே மாதம் புலிகள் தோற்கடி க்கப்பட்ட பின்னர் வடபகுதி மக்கள் தங்கள் காணிகளுக்கும் உடமைகளு க்கும் இப்போது உரிமை கோரி வருகிறார்கள்.
எனவே, இந்த மக்களையும் நாம் வடபகுதியில் நிலைகொள்ளவைத்து அவர்களின் பெயர்களையும் வாக்காளர் இடாப்புகளில் சேர்க்க வேண்டியிருப்பதாக வும் ஜனாதிபதி தெரிவித்தார்.
30 ஆண்டுகளுக்கு முன்னரே கடைசி தடவையாக வடமாகாணத்தின் வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்டது. இதனை வைத்துக் கொண்டு இப்போது வடமாகாணத்தில் வாக்களிக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது என்பதை தீர்மானிக்க முடியாதிருக்கிற தென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதற்கு அடுத்தபடியாக அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகளுள்ளன.
இதனை சர்வதேச உதவியுடன் விரைவில் பூர்த்தி செய்ய முடியுமென நாம் எதிர்பார்க்கின்றோம். வடபகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கும் நாம் தீர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையை கொடுக்க வேண்டுமென்ற கேள்விக்கு தேர்தலை நடத்த வேண்டுமென்பது பிரதான காரணியாக அமையும். 1987ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட உடனேயே தமிழர்களின் இந்தப் பிரச்சினையை நாம் தீர்த்து வைத்திருக்கலாம் என்று ஜனாதிபதி கூறினார். (1987ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் இலங்கை அரசியல் சாசனத்திற்கு கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தம் என்பதனால் இப்போது அது 13 ஆவது திருத்தம் என்று அழைக்கப்படுகின்றது)
இந்த 13வது திருத்தத்தில் அதிகார பரவலாக்கலுக்கான ஒரு பிரிவு இருந்தது. இருந்தாலும் இந்தத் திருத்தம் நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டது. இதனால் வட மாகாணத்தை தவிர மற்றைய மாகாணங்களுக்கு மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன.
இராணுவம் மக்களின் சகல செயற்பாடுகளிலும் சம்பந்தப்பட்டு இருக்கின்றது என்ற கேள்விக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கையில், அவசியம் ஏற்படும் போது மட்டுமே இராணுவத்தினர் வெளியில் வந்து செயற்பட வேண்டுமென்று தாம் உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.
2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தான் இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்ற கூற்றை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் அளித்த சகல உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதற்கு தக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. தாம் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்றும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்த கருத்தையும் இங்கு ஜனாதிபதி ஞாபகப்படுத்தினார்.
அந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், நீங்கள் செனட் சபை ஒன்றை உருவாக்குவீர்களா என்று கேட்டதற்கும் தாம் ஆம் என்று பதிலளித்ததாக ஜனாதிபதி கூறினார். ஜூன் 29ம் திகதியன்று ஜெனீவா பிரச்சினை குறித்து திரு. சிவசங்கர் மேனனுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார்.
நவம்பர் மாதத்தில் நடைபெறும் ஸினிசிஞிவி கூட்டத்தொடரில் உலகளாவிய காலப்பகுதி மீளாய்வு குழுவுக்கு இந்தியா தலைமை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், செனட் சபையை உருவாக்குதல் உட்பட இந்தப் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தும் யோசனைகள் பாராளுமன்றத்தில் இருந்தே முன்மொழியப்பட வேண்டுமென்று கூறினார். இதனால் தான் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முக்கியத்துவத்தை அரசாங்கம் வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
2011ம் ஆண்டு நவம்பர் 28ம் திகதி முதல் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினையை இந்து பத்திரிகை சுட்டிக்காட்டிய போது, ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பாக தாம் முதலில் உண்மை நிலைப்பாட்டை அறிந்து கொள்ள வேண்டுமென்று கூறி பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு அது பற்றிய தகவல்களை கேட்டறிந்தார்.