கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச் சராக வரவேண்டுமென அந்த மாகாண முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதில் என்ன தவறிருக்கின்றதென்று மாகாண அமைச்சர் எம்.எஸ். சுபைர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களும் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பங்கினராக இருக்கின்றனர். எனவே முதலமைச்சர் நியமனம் மாறி மாறி வருவதே தமிழ், முஸ்லிம் உறவுக்கு காத்திரமாக அமையுமெனச் சுட்டிக்காட்டிய அவர் இனப்பிரச்சினைத் தீர்வில் சிறுபான்மை மக்கள் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்ப இது அடித்தளமாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கியத்துக்காக குரலெழுப்பும் தமிழ்த் தலைமைகள் இதையுணர்ந்து செயற்படுவதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகையேற்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராவதற்கும் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளே உதவியுள்ளன. முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்புகள் உச்சளவில் இருந்தும் ஜனாதிபதியின் காலத்துக்குப் பொருத்தமான முடிவை முஸ்லிம்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
எனவே, இம்முறை முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதற்கு ஆளுங்கூட்டணியிலுள்ள தமிழ்த் தலைமைகள் தடையாக இருக்கக் கூடாதென்பதே எமது கோரிக்கையாகும்.
முஸ்லிம்களின் பிரதானமான கட்சிகளான ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகியன அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சிகள். வடக்கு – கிழக்கில் கணிசமான வாக்குகளைக் கொண்ட கட்சிகள் கிழக்கில் ஒரு மாகாண சபைத் தேர்தலொன்று நடத்தப்படுவதற்கு வழிகோலிய பிரதான கட்சிகள். எனவே எமது நியாயமான கோரிக்கைகள் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.