6/09/2012

| |

ஜனாதிபதியின் லண்டன், இத்தாலி விஜயம் இலங்கையின் சர்வதேச விவகாரத்தில்திருப்புமுனை

  • பிரபுக்கள் சபை, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு
  • 2013 பொதுநலவாய தலைவர்கள் மாநாடு குறித்தும் ஆராய்வு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று வத்திக்கானில் புனித பாப்பரசர் 16வது ஆசீர்வாதப்பரைச் சந்தித்தார்.

லண்டனில் நடைபெற்ற 11வது எலிசபெத் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரித்தானிய அரசியல்வாதிகளுடன் பரந்துபட்ட சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இது இலங்கையின் சர்வதேச விவகாரத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் தங்கியிருந்த போது மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எலிசபெத் மகாராணியைச் சந்தித்ததாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பில் தொலைபேசி மூலம் அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன், எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மெலிபான்ட், வெளிவிவகார மற்றும் பொதுநலவாயச் செயலாளர் வில்லியம் ஹேக் ஆகியோரை ஜனாதிபதி லண்டனில் சந்தித்தார். அதன் பின்னர் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கலாநிதி கிறிஸ் நோனிஸின் இல்லத்தில் பிரபுக்கள் சபை மற்றும் பாராளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் 25 பேரை ஜனாதிபதி சந்தித்தார்.
அதேநேரம், பிரித்தானியாவிலுள்ள இலங்கை சமூகத்தவர்களையும் ஜனாதிபதி சந்தித்து காத்திரமான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். லண்டனில் தங்கியிருந்தபோது பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மாவைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், 2013ஆம் ஆண்டு பொதுநலவாயத் தலைவர்கள் மாநாடு தொடர்பிலும், அது பற்றிய ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இத்தாலிய வெளிவிவகார அமைச்சரை ரோம் நகரில் சந்தித்துப்  பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
முன்னதாக லண்டனில் தங்கியிருந்தபோது பிரித்தானிய வெளியுறவுச் செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.