இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்த யோசனைகளை காங்கிரஸ் கட்சி வியாழனன்று நிராகரித்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு மம்தா தெரிவித்திருந்த மூன்று வேட்பாளர்களையும் ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக, தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அல்லது முன்னாள் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக நியமிக்கலாம் என்று மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கும் உத்திரப்பிரதேச ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும் கூட்டாக அறிவித்திருந்தனர்.
இந்த யோசனையை ஏற்கமுடியாது என்று தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்தன் துவிவேதி, மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் 2014 ஆண்டுவரை தொடர்ந்து நீடிப்பார் என்கிற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்பதால் அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என்றும் கூறினார். அப்துல் கலாம் மற்றும் சோம்நாத் சட்டர்ஜி ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்புடைய வேட்பாளர்களல்ல என்றும் அவர் கூறினார்.
அத்வானி ஜெயலலிதா சந்திப்பு
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று வியாழனன்று தமிழக தலைமைச் செயலகத்தில் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, ஏற்கனவே அஇஅதிமுக நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் தலைவர் சங்மாவை ஆதரிக்கவிருப்பது குறித்து தனக்கு ஜெயலலிதா தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய சூழல் குறித்து தாம் அவருடன் இன்று விவாதித்ததாகவும், இரு கட்சிகளும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஒருங்கிணைந்து முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணி, குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி விவாதிக்கும் எனவும் அவர் கூறினார்.
தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வது குறித்து ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் நிலவும் குழப்பங்கள் பற்றிக் குறிப்பிட்ட அத்வானி, இவ்வளவு தடுமாற்றத்தை முன்னர் எந்த அரசிலும் தான் காணவில்லை என்றார்.
முதல்வர் ஜெயலிதாவும் மத்திய அரசு ஒரேயடியாகக் குழப்பிவிட்டது என்று மட்டும் கூறினார். மற்றபடி ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம், புதிதாகச் சொல்ல எதுவுமில்லை என்றும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.