6/26/2012

| |

லிபிய முன்னாள் பிரதமர் துனீஷியாவிலிருந்து நாடுகடத்தல்

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசில் பிரதமராக இருந்த அல் பக்தாதி அல் மஹ்மூதி துனீஷியாவில் இருந்து லிபியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
முஅம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்டபோது லிபியாவிலிருந்து தப்பிச்சென்ற அல் மஹ்மூதி கடந்த செப்டெம்பர் மாதம் துனீஷியாவில் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் துனீஷிய சிறையில் இருந்த அல் மஹ்மூதி லிபியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக துனீஷிய ஜனாதிபதி மொன்கால் மர்சூகி குறிப்பிட்டுள்ளார்.
விசேட ஹெலிகொப்டர் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அல் மஹ்மூதி லிபிய தலைநகர் திரிபோலிக்கு அழைத்துவரப்பட்டதாக லிபிய இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.
இராஜதந்திர முயற்சியாக அல் மஹ்மூதியை நாட்டுக்கு கொண்டுவர முடிந்ததாக லிபிய இடைக்கால அரசின் பிரதமர் அப்தல் ரஹீம் அல்கிப் தெரிவித்தார்.
இந்நிலையில் எமது மத அடிப்படையிலும் சர்வதேச மனித உரிமைகளை மதித்தும் லிபிய அரசு குற்றவாளியான அல் மஹ்மூதியை நல்லவகையில் நடத்துவதாக பிரதமர் அல்கிப் உறுதி அளித்துள்ளார்.
எனினும் இந்த நாடு கடத்தலை தொடர்ந்து துனீஷிய அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. துனீஷிய ஜனாதிபதி தம்மிடம் ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக இஸ்லாமிய கட்சியை சேர்ந்த பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.