மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்திலுள்ள சரோஜா எனும் சிறுமியை காங்கேயனோடையைச் சேர்ந்த முகம்மட் அலி முகம்மட் நஜிமுதீன் மற்றும் அவரது மனைவி முகம்மது லெவ்வை சித்தி சபுறா ஆகிய இருவரும் தத்தெடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேற்படி சிறுமியை தத்தெடுப்பதற்காக காங்கேயனோடையைச்சேர்ந்த மேற்படி நஜிமுதீன் மற்றும் அவரது மனைவி சபுறா ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5.9.2011 அன்று வழக்கொன்றை தாக்கள் செய்திருந்தனர்.
இந்த வழங்கை விசாரணை செய்து வந்த மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.ஏ.மனாப் இந்த சிறுமியை மேற்படி நஜிமுதீன் மற்றும் அவரது மனைவி சபுறா ஆகியோருக்கு தத்தெடுப்பதற்கு அனுமதி வழங்கி அண்மையில் தீர்ப்பளித்துள்ளார்.
மேற்படி சறோஜொ எனும் சிறுமியை காங்கேயனோடையைச்சேர்ந்த மேற்படி நஜிமுதீன் என்பவர் வவுனதீவு குறுந்தயடி எனுமிடத்திற்கு மாடுவாங்க சென்ற போது சிறுமியின் தந்தையிடம் ஐம்பதாயிரம் ரூபா பணத்திற்கு சிறுமியின் அனுமதியில்லாமல் சிறுமி கதறியழ 6.7.2011 அன்று சிறுமியை காங்கேயனோடைக்கு அழைத்து வந்தார் என தெரிவித்து இவர் மீது குற்றம் சுமத்தி பொலிசில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டிருந்தது.
நான் சிறுமியை கட்டாயப்படுத்தியோ அல்லது பணத்திற்கோ சிறுமியை காங்கேயனோடையிலுள்ள எனது வீட்டுக் கொண்டு வரவில்லை அந்த சிறுமிக்கு தாய் இல்லாததால் அந்த சிறுமியின் தந்தையின் வசதியின்மையான பராமரிப்பில் சிறுமி இருந்ததால் என்னுடன் சிறுமி வருவதற்கு பூரனவிருப்பம் தெரிவித்ததால் நான் அந்த சிறுமியை தத்தெடுப்பதற்காக அழைத்து வந்தேன் என நஜிமுதீன் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து அந்த சிறுமியை மேற்படி நஜிமுதீனிடமிருந்து பெற்ற பொலிசார் அவரை மட்டக்களப்பிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஒப்படைக்கப்பட்டு சிறுவர் இல்லத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் மேற்படி காங்கேயனோடை நஜிமுதீன் மற்றும் அவரது மனைவி சபுறா ஆகிய இருவரும் இந்த பிள்ளையை தத்தெடுப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கள் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்து வந்த மாவட்ட நீதிபதி கடந்த 24.2.2012 அன்று வழக்கை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் இந்த சிறுமியை மேற்படி காங்கேயனோடையைச்சேர்ந்த நஜிமுதீன் மற்றும் அவரது மனைவி சபுறா ஆகிய இருவரும் தத்தெடுப்பதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார்.
இந்த சிறுமியை இவர்கள் தத்தெடுப்பதற்கு சிறுமியின் விருப்பத்தை நீதி மன்றம் கேட்ட போது தத்தெடுப்பதற்கு பூரண விருப்பமுள்ளவராக இருப்பதாலும் இந்த தத்தெடுத்தல் தொடர்பில் எவ்விதமான கொடுப்பனவுகளோ எவராலும் எவருக்கும் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை யெனவும் நீதிமன்றம் கருதுவதனால் இந்த தத்தெடுத்தலை அனுமதிப்பதென நீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதி இதன் போது தெரிவித்தள்ளார்.
இந்த பிள்ளையின் பிறப்பு சான்றுப்பத்திரத்தில் உரிய கூண்டில் தத்தெடுக்கப்பட்டது(மகவேற்கப்பட்டது) என்ற வாசகத்தைச் சேர்க்கும் படியும் பதிவாளர் நாயகத்திற்கு நிதிபதி கட்டளையிட்டுள்ளார்
மேற்படி நஜிமுதீன் இந்த சிறுமியை பணத்திற்கு சிறுமியின் விருப்பமில்லாமல் வாங்கி வந்தார் என அப்போது பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடயம் இவ்வாறிருக்க கடந்த ஒருவாரத்திற்கு முதல் சுவிஸ் நாட்டிலிருந்து இயங்கும் இணையதளமொன்று இந்த சம்பவத்தையும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் சிறுவன் ஒருவன் காத்தான்குடி முஸ்லிம் ஒருவரினால் கடத்தப்பட்டதாகவும் கூறி திரிவு படுத்தி முழு முஸ்லீம் சமூகத்தின் உள்ளங்களையும் புண்படுத்தம் வகையில் செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.