இலங்கையில் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்துவரும் இராணுவத்தினர் தமது பிரதேசத்திலும் நெல் கொள்வனவு செய்ய வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் நாளாந்த அரிசி தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டே இந்த நெல் கொள்வனவு நடவடிக்கை என இராணுவம் கூறுகின்றது.இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு உச்ச நன்மை கிடைக்கச் செய்வதே தமது நோக்கம் என்று கூறும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, விவசாயிகளின் போக்குவரத்து விநியோக சிரமங்களை குறைக்கும் வகையில் நேரடியாக அந்தந்த இடங்களுக்கு இராணுவம் சென்று நெல் கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கின்றார்.
அரசாங்கத்தின் நிர்ணய விலையின் படியே நெல் கொள்வனவு செய்யப்படுவதாகக் கூறும் அவர், மாதமொன்றிற்கு 2 மில்லியன் கிலோ நெல் இராணுவத்தினருக்கு தேவைப் படுகின்றது, இருப்பினும் முழுமையான தேவைக்குரிய நெல்லை கொள்வனவு செய்யும் உத்தேசம் தற்போதைக்கு இல்லை' என்றும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் தெஹியத்தக்கண்டி பகுதி விவசாயிகளிடமிருந்து இராணுவத்தினரால் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று மாவட்ட கமநல அமைப்புகள் ஒன்றியத்தின் செயலாளர் கே.திருநாவுக்கரசு விசனம் தெரிவிக்கின்றார்.
கடந்த பெரும்போக வேளான்மைச் செய்கையின்போது சாகுபடி செய்யப்பட்ட நெல் ஒரு பகுதி இதுவரை சந்தை வாய்ப்பின்றி தமது களஞசியங்களில் தேங்கிக் கிடப்பதாகவும் சுட்டிக் காட்டும் அவர்,அப்படியே இராணுவம் நெல்லை கொள்வனவு செய்ய முன் வருமானால் அது வரவேற்கத் தக்கது என்றும் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளிடம் இதுவரை நெல் கொள்வனவு செய்யப்படாதுள்ளமை தொடர்பாக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள கவலை குறித்து இராணுவப் பேச்சாளரிடம் சுட்டிக்காட்டிய போது, இந்த விடயம் குறித்து தமக்கு அறியப்படுத்தியமை வரவேற்கத் தக்கது என்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு இதனை கொண்டு வருவதாகவும் பதிலளித்தார்.