எதிர்வரும் 29.6.2012 ஆம் திகதி ஏ.ஜி.எம். ஸதக்கா அவர்களின் பன்முகப் படைப்புக்கள் அடங்கிய முழுத் தொகுப்பு நூல் வெளியீடு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
கவிஞர் ஏ.ஜி.எம். ஸதக்கா (1.5.1970 – 20.8.2011), கடந்த வருடம் வீதி விபத்து ஒன்றின் மூலம் மரணமடைந்தார். பதின்மூன்று வயதிலிருந்தே எழுத ஆரம்பித்த இவர் ‘இமைக்குள் ஓர் இதயம்’ (1987) ‘போர்க்காலப்பாடல்’ (1998) ஆகிய இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். சுதந்திர இலக்கிய விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான விருதையும் ‘போர்க்காலப் பாடல்’ பெற்றுக் கொண்டது. இளந்தளிர், தபோஸ்ட் ஆகிய இதழ்களையும் எண்பதுகளில் வெளியிட்ட இவர் மின்னல், பசுமை, அந்நஜா, இலக்கு, கோஷம், புதிய தொனி ஆகிய பிராந்திய இதழ்களுடன் இணைந்தும் இயங்கினார். யாத்ரா கவிதை இதழின் இணையாசிரியராகவும் செயற்பட்டார். நண்பர் இலக்கியக் குழு, இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், கல்குடா முஸ்லிம் படைப்பாளர் பேரவை போன்ற அமைப்புகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவ்வெளியீட்டு விழாவில் ‘ஏ.ஜி.எம். ஸதக்கா: எழுத்தின் புன்னகை’ என்ற பெயரில் அவரின் பன்முகப் பரிமாணங்களையும் வெளிக்கொணரும் வகையில் அவரது எழுத்துக்கள் ஏ.பி.எம். இத்ரீஸால் முழுமையாகத் தொகுக்கப்பட்டு செம்பதிப்பாக காகம் பதிப்பகம் வெளியிடுகின்றது. ஒரு படைப்பாளி, ஆய்வாளன் என்பவற்றுக்கும் மேலாக ஒரு சமூகத்தின் எழுத்தியக்கப் போராளியாக இயங்கிய ஏ.ஜி.எம். ஸதக்கா எழுதிய 109 கவிதைகள், 12 சிறுகதைகள், இலக்கியம், அரசியல், சமயம், கல்வி, பண்பாடு குறித்த 58 கட்டுரைகள், அவர் எழுதிய கடிதங்கள், அரிதான அவர் இடம்பெறும் புகைப்படங்கள், அவரைப்பற்றிய மற்றவர்களின் மதிப்பீடுகளும் நினைவுக்குறிப்புகளும் 615 பக்கங்களில் முழுமையாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.