பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
பிரித்தானிய மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டங்கள் இங்கு லண்டனில் பல்வேறு இடங்களில் நடந்துகொண்டிருக்கின்றன.
இதில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பாரியாருடன் லண்டன் வந்திருக்கிறார்.இந்த விஜயத்தின் போது, அவர் பக்கிங்ஹாம் மாளிகையில் நடக்கும் விருந்திலும், புனித போல் தேவாலயத்தில் நடக்கும் நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்.
அதேவேளை, ராஜபக்ஷ அவர்களது வருகையை கண்டித்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களால் இங்கு பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஞாயிறன்று இரவு லண்டன் ஹீத்துறு விமானநிலையத்தில் கூடிய பலர் அவரது வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அங்கு நடத்தினார்கள்.இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினார்கள். அப்படியான ஒருவர் மகாராணியாரின் வைபவத்தில் கலந்துகொள்வது மகாராணிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல் என அவர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை திங்களன்று ராஜபக்ஷ அவர்கள் தங்கிருப்பதாகக் கூறப்படும் விடுதிக்கு எதிராக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதில் ஒன்று அவருக்கு எதிராகவும் அடுத்தது ஆதரவாகவும் நடந்தது.
இரண்டிலும் சிலநூறுபேர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இரு தரப்பிலும் கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போடு சற்று குறைவானதுதான்.
ஆனால், பிரித்தானிய அரசாங்கத்தின் விருந்தாளியாக வந்திருக்கின்ற போதிலும், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு கணிசமான சங்கடத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.