நித்யானந்தாவின் பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல்வைத்துள்ளது.
மேலும் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யவும், வங்கிக் கணக்கை முடக்கவும் கர்நாடக உள்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
நித்யானந்தா மீது சில பக்தைகள் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக அவரைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவுசெய்துள்ளதாக கர்நாடக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கர்நாடகத்தில் நித்யானந்தாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு மதத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டபடி உள்ளனர். கொடும்பாவி எரிப்பு, தர்ணா,ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என நடந்தபடி உள்ளது.