* திருமலை, சிலாபம், உடப்பூர் வாசிகள் 53 பேர் கடற்படையால் கைது
* 60 கடல் மைல் தூரத்தில் மடக்கிப் பிடிப்பு
* 47 தமிழர், 4 சிங்களவர், இரு இந்தியர்கள் இருந்ததாக தகவல்
திருகோணமலை, சிலாபம், உடப்பூர் பகுதிகளிலிருந்து மட்டக்களப்பு ஊடாக வள்ளம் ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த 53 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (12) அதிகாலை அருகம்பையிலிருந்து சுமார் 60 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிரு ந்த மேற்படி வள்ளத்தை கடற்படையினர் சுற்றி வளைத்து சோதனையிட்ட போதே இவர்கள் 53 பேரும் கைது செய் யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
இரண்டு இந்தியர்கள் உட்பட 49 தமிழர்களும், 4 சிங்களவர்களும் இவ்வள்ளத்தில் பயணித்ததாகவும் இவர்கள் அனைவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேற்படி 53 பேரும் அன்றைய தினமே ஹம்பாந்தோட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் பயணித்த வள்ளத்தை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலிருந்து குறித்த வள்ளம் 53 பேருடன் புறப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்பரப்பை கடந்து செல்லும் போதே இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவுக்கு வள்ளம் மூலம் அனுப்புவதாக பாரிய அளவில் தமிழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். பாதுகாப்பற்ற இப்பயணத்திற்கு துணை போக வேண்டாம் என குறிப்பாக தமிழ் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 53 பேருள் நால்வர் இந்த பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.