6/13/2012

| |

சீனா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

ஈரானின் எண்ணெய் இறக்குமதியை குறைக்காத பட்சத்தில் மாத இறுதியில் தடை வாய்ப்பு
ஈரானின் எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்ட 7 நாடுகள் மீதான தடை எச்சரிக்கையை விலக்கிக் கொண்டுள்ள அமெரிக்கா, சீனா மீதான பொருளா¡ர தடை எச்சரிக்கையை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதிக்குள் சீனா, தனது ஈரானுடனான எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்ளாத பட்சத்தில் அமெரிக்கா அதன் மீது பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும் ஒரு நாடு ஏனைய நாடுகள் மீது ஒரு தலைப்பட்சமாக தடைவிதிப்பதை எதிர்ப்பதாக சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்கா கடந்த ஆண்டு விதித்த தடை எச்சரிக்கைக்கு அமைய செயற்பட்ட 7 நாடுகள் மீதான பொருளாதார தடை எச்சரிக்கையே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா, மலேஷியா, தென்னாபிரிக்கா, தென்கொரியா, இலங்கை, துருக்கி மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளின் தடை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஜப்பான் மீதான இவ்வாறான தடை எச்சரிக்கையை அமெரிக்கா விலக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஈரானின் மசகு எண்ணெய் இறக்குமதியில் பெரும்பங்கு வகிக்கும் சீனா மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்யும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மீதான தடை எச்சரிக்கை தளர்த்தப்படவில்லை.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்காக யுரேனிய செறிவூட்டலில் ஈடுபடுவதாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் நம்புகிறது. எனினும் அமைதியான நடவடிக்கைக்கே அணு செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக ஈரான் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் எண்ணெய்க்கு தடை விதித்துள்ளது. இந்த தடை எதிர்வரும் ஜுலையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஈரான் எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு தடை எச்சரிக்கை விடுத்தது. இதன்படி ஈரான் எண்ணெய் இறக்குமதியை குறைக்க 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட மேற்படி தடை எச்சரிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைச்சாத்திட்டிருந்தார்.
எனினும் அமெரிக்காவின் இந்த தடை சட்டத்திற்கு பல்வேறு நாடுகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஐ. நா. பாதுகாப்புச் சபைக்கு மாத்திரமே இவ்வாறான ஒரு தடையை விதிக்க முடியும் என அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
இவ்வாறான தடையால் உலக எண்ணெய் சந்தையில் ஏற்கனவே தளம்பல் ஏற்பட்டுள்ளது. எனினும் உலக சந்தையில் எண்ணெய் தட்டுப்பாட்டை ஈடுசெய்யும் வகையில் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக சவூதி அரேபியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் நாளொன்றுக்கு உற்பத்தி செய்த 3.3 மில்லியன் பெரல் எண்ணெய்யில் கால் பங்கு கடந்த ஏப்ரலில் விற்கப்படவில்லை என சர்வதேச எரிசக்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
இதில் ஈரானின் நெருங்கிய நட்பு நாடான இந்தியா அதன் எண்ணெய் இறக்குமதியில் 11 வீதத்தை குறைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்தே இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் அமெரிக்க தடை எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ள சீனா, ஈரான் அணு செயற்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் என குறிப்பிட்டுள்ளது. அடுத்த வாரம் மொஸ்கோவில் நடைபெறவுள்ள 6 நாடுகள் கூட்டத்தில் ஈரான் விடயத்தில் முக்கிய தீர்மானம் எட்ட முடியும் என சீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.