ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, இந்தோனேஷியத் தீவான ஜாவாவுக்கு தெற்கே கடலில் கவிழ்ந்துள்ளது.
அந்தப் படகில் இருந்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக கருதப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு இருநாட்டு கடற்படை மற்றும் மீட்புக் கப்பல்கள் விரைந்துள்ளன. மீட்பு நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் தீவுக்கு வடக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில், இந்தப் படகில் பயணித்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை தாங்கள் கண்டதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக பலர் நீரில் மூழ்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது என ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தப் படகு இலங்கையிலிருந்து வந்ததாக இந்தோனேஷிய அரசின் மீட்புக் குழுவின் பேச்சாளர் காஹா பிரகாசோ பிபிசியின் இந்தோனேஷிய சேவையிடம் தெரிவித்தார்
இதனிடையே இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள தமது தூதரகத்துடன் இலங்கை வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் இந்தப் படகில் இருந்தவர்கள் இலங்கையர்களா, அல்லது அப்படகு இலங்கையிலிருந்து பயணமானதா என்பதை உறுதி செய்யமுடியாமல் உள்ளது என்று வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் சந்தேஷ்யவிடம் தெரிவித்துள்ளார்.
110 பேர் மீட்பு-மற்றவர்கள் நிலை என்ன?
விபத்துக்குள்ளான இந்தப் படகில் இருந்து 110 பேரை தமது நாட்டு கடற்படை மற்றும் பயணிகள் கப்பல்கள் மீட்டுள்ளதாக ஆஸ்திரேலிய நாட்டு கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் பேச்சாளர் ஜோ மீஹான் தமிழோசையிடம் தெரிவித்தார்
எனினும் அந்தப் படகில் பயணம் செய்தவர்கள் குறித்தோ, படகு எங்கு செல்லவிருந்தது என்பது குறித்தோ எந்தத் தகவலும் தன்னிடம் இல்லை எனவும் அவர்கள் கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அவர் கூறுகிறார்.படகு கவிழ்ந்தது இந்தோனேஷியக் கடற்பரப்பு என்றாலும், இந்த மீட்பு நடவடிக்கையில் ஆஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாகவும், படகில் பயணித்தவர்கள் தங்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாகவுமே அவர்கள் கிறிஸ்துமஸ் தீவுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் எனவும் ஆஸ்திரேலிய அரசின் பேச்சாளர் கூறுகிறார்.
இது தொடர்பில் வேறு எந்த மேலதிகத் தகவல்களையும் என்னால் இப்போது தர இயலாது எனவும் ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் பேச்சார் ஜோ மீஹான் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில், இந்த ஆண்டு ஆசிய நாடுகளிலிருந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேஷியவை அதற்கான பாதையாக பயன்படுத்தி, அங்கு சென்று அங்கிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா பயணமாக முயற்ச்சிகிறார்கள்.