6/09/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்ட பிச்சையை வைத்துக்கொண்டு பிதற்றும் யோகேஸ்வரன் மா.ச.உ.பூ.பிரசாந்தன்

2008ம் வருடம் மாகாண சபைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடாததன் காரணமாகவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாகாண சபையில் 03 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது எனக் குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தூரநோக்குடன் தனித்து போட்டியிட்டதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மூவர் தெரிவு செய்யப்பட்டனர் என்பதை மறந்து விடக்கூடாது. மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு சார்பாக பிரச்சாரம் செய்த யோகேஸ்வரன் தான் கேட்ட இணைப்பாளர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொண்டார் என்பதை மறந்திருக்க மாட்டார் என நினைக்கின்றேன். மட்டக்களப்பு மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளேன் எனக் குறிப்பிடும் யோகேஸ்வரன் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 20665 மாத்திரமே என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தனித்து போட்டியிட்டு முதலமைச்சராக வரலாம் எனக் குறிப்பிடும் இவர் தனக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றதென்றால் எங்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டட்டும். தமிழரசுக் கட்சி தலைமையில் ஊறிய மக்கள் கட்சிக்கு அளித்த வாக்குகள் மூலமே இவர் வெற்றி பெற்றார். ஆனால் இன்றுவரை இந்து மதத்தையும், இந்து இளைஞர் மன்றத்தினையும் வைத்து அரசியல் செய்யும் இவர் தைரியமிருந்தால் இந்து இளைஞர் பேரவையின் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்து பார்க்கட்டும்.
இந்து இளைஞர் பேரவை என்பது அரச சார்பற்ற நிறுவனம். ஆனால் தனது வங்குரோத்து அரசியலை காப்பாற்றுவதற்காக இந்து இளைஞர் பேரவை என்ற இந்து நாமத்தை வைத்துக்கொண்டு வெளிநாடுகளிலும், ஏனைய இடங்களிலும் நிதி பெற்று அரசியல் செய்யும் இவர் தைரியமிருந்தால் தனது பதவியைத் துறந்து காட்டட்டும். அதற்கு மாறாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அனைத்து உதவிகளையும் தான் பெற்றுவிட்டு மக்களுக்கு எதுவும் செய்யாது, போலித்தனமாக அரசியல் செய்வதை விடுத்து மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என இவருக்கு அறிவுரை கூறும் நிலையில் நாம் உள்ளோம்.
அத்தோடு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரியாக இருந்த யோகேஸ்வரனுக்கு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கும், தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கும் வித்தியாசம் தெரியாதிருப்பது வியப்பிற்குரிய விடயமும், வேதனைக்குரிய விடயமுமாகும் என மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
அண்மையில், யோகேஸ்வரனால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே அவரால் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.