6/02/2012

| |

மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளின் 2012ஆம் ஆண்டு அபிவிருத்திக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுமார் ஏழு கோடியே 70 இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பில் ஆராயும் அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரெட்னம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் மற்றும் மட்டக்களப்பு பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.
2012ஆம் ஆண்டு 370 திட்டங்களுக்கு சுமார் ஏழு கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவற்றில் கமநெகும திட்டத்தின் ஊடாக 48 திட்டங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 4 கோடியே 80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் திவிநெகும திட்டத்தின் ஊடாக 48 வறுமை ஒழிப்பு செயற்றிட்டங்கள் மேற்கொள்வதற்காக 19 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் 31 இலட்சம் ரூபாவும் மாகாண சபை உறுப்பினர்களினால் 16 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாக்களும் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விசேடமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வருடாந்த விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் சுற்றுலா மற்றும் பல்வேறு துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதன்போது, அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.