6/14/2012

| |

ஆங் சான் சூக்கி ஐரோப்பா சுற்றுப் பயணம்: 1991 நோபல் விருதையும் ஏற்கிறார்

24 ஆண்டுகளுக்கு பின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் ஆங் சாங் சூகி தற்போது ஐரோப்பாவின் சில நாடுகளை பார்வையிட செல்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த சுற்றுப் பயணம் நீடிக்கும் என தெரிகிறது. மியன்மாரில் ஜனநாயக மீட்பு போராட்டம் நடத்தி 21 ஆண்டுகள் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆங் சாங் சூகி, 2010 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சூகியின் கட்சி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் கலந்துகொள்ள சூகிக்கு அழைப்பு வந்ததையடுத்து அவர் அதில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் நேற்று ஐரோப்பா சென்ற அவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்கிறார். இதையடுத்து நோர்வே, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை பார்வையிட இருக்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது அவர் 1991 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கப் பெற்ற அமைதிக்கான நோபல் விருதை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.