6/15/2012

| |

தெரிவுக் குழுவுக்கு எதிர்க்கட்சியினரை அழைத்துவர அரசாங்கம் முழு முயற்சி காணி, பொலிஸ் அதிகாரங்கள், 13+ குறித்தும் பேசலாம் - அமைச்சர் கெஹெலிய

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு எதிர்க்கட்சிகளை அழைத்து வருவதற்காக தன்னாலான சகல முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள் ளும். வெளியில்பேசப்படும் காணி, பொலிஸ் அதிகாரங்கள், 13 பிளஸ் இதற்கு முன் ஆராயப்பட்ட விடயங்கள் என சகல விடயங்கள் குறித்தும் இங்கு ஆராய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
முதலில் சகல கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்து பேச்சை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் :- தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் தெரிவுக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கு தமது பிரதிநிதிகளை நியமிக்குமாறு எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அரச தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தேசிய பிரச்சினை குறித்து எங்கு பேசினாலும் இறுதித் தீர்வு பாராளுமன்றத்தினூடாகவே எட்ட வேண்டும். அதனால் பாராளுமன்றத்தில் இருந்தே இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்றே ஜனாதிபதி கருகிறார்.
அனைத்து கட்சிகளும் கூடி பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்து பேச்சுவார்த்தையை முதலில் ஆரம்பிக்க வேண்டும். 13 ஆவது திருத்தம், 13 பிளஸ், பொலிஸ், காணி அதிகாரம் என பல்வேறு விடயங்கள் குறித்து மேடைபோட்டு பேசுகின்றனர்.
ஆனால் அவற்றை தெரிவுக்குழுவுக்கு வந்து கூறட்டும். இங்கே பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.