இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் நேற்று திங்கட்கிழமை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதியும் தலைவருமான சரத் ஃபொன்சேகா, இலங்கை மீது பழிசுமத்தப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை எதுவும் வந்தால் இலங்கை அதற்கு நிச்சயம் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இலங்கையின் தலைவர்கள் சிலர் தமது முகத்தை மூடிக்கொள்கிறார்கள் என்று பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்த ஃபொன்சேகா, அவர்கள் அப்படி நடந்து கொள்வது எதையோ மறைக்க முற்படுகிறார்கள் என்ற எண்ணம் மற்றவருக்கு தோன்றக் காரணமாக இருக்கிறது எனக் கூறினார்.யுத்தம் நடத்தப்பட்ட விதம் தொடர்பான பல்வேறு விஷயங்களும் அரசாங்கத்துடன் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதற்கான ஒரு அவசியம் இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது நடந்த விஷயங்களுக்கு தானோ நாட்டின் அரசியல் தலைவர்களோ காரணமாக இருந்திருக்கவில்லை என்று பொன்சேகா கூறினார்.யுத்தத்தின் இறுதி கட்டம் பற்றி எவர் முன்னாலும் தோன்றி பதில் சொல்ல தனக்கு எவ்விதத்திலும் அச்சமோ தயக்கமோ இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை அவர் முழுமையாக மறுத்தார்.
அதிபராக ஆவதற்கு வேண்டியோ, நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்காக வேண்டியோ தான் அரசியலில் ஈடுபடவில்லை என்றும், இலங்கையில் காணப்படும் ஊழல்மிகு அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்காகவே தான் அரசியலில் ஈடுபட விரும்புவதாகவும் பொன்சேகா தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளை தோற்கடித்த இராணுவ நடவடிக்கையின்போது இராணுவத் தளபதியாக இருந்தவர் சரத் ஃபொன்சேகா.
அந்த வெற்றியின் பெருமை யாரைச் சேரும் என்ற விடயத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன் பொன்சேகா முரண்பட நேர்ந்திருந்ததை அடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.