தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்ற வேளையில் அதனைக் குழப்புவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்த கருத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் ஏற்படுவதற்கும், பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வதற்கும் வழிசமைத்துக்கொடுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பின்னால் கிழக்கு மாகாண மக்கள் அணிதிரண்டு நிற்கும் இவ் வேளையில் கட்சியின் நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அண்மைக்காலமாக கட்சியின் உறுப்பினர்களையும், கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனையும் தூற்றி வருவது அனைவரும் அறிந்த விடயம். இவ் வேளையில் தனது சொந்த பிரச்சினையில், மாநாட்டைக் குழப்ப தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முயற்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளது கட்சியை அவமதிப்பதுடன், இது ஓர் ஆதாரமற்ற கருத்துமாகும்.
பொறுப்பு மிக்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தெரிவிக்கின்ற கருத்துக்களும் ஆதாரமுள்ளதாகவும், யதார்த்தபூர்வமாகவும் இருக்க வேண்டும். தான் அரசியல் நடத்துவதற்காக பொறுப்பு மிக்க எமது அரசியல் கட்சிக்கு அவதூறு விளைவிப்பது நாகரீகமற்ற செயலாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டுள்ள இக் கருத்தினை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் அவர்களுக்குள் நடைபெற்ற குழப்பங்களுக்கும், எமது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இதனூடாக மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.