5/18/2012

| |

லண்டனில் சடலமாக மீட்கப்பட்ட முரளி கொலை செய்யப்பட்டுள்ளார்? விசாரணை வேண்டுமென பெற்றோர் கோரிக்கை !உயர்ஸ்தானிகருக்கு கடிதம்

லண்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த மரியதாஸ் முரளிதாஸின் மரணத்தில் தமக்குச் சந்தேகம் இருபப்பதாகவும் அதனால் அது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் சடலத்தினை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
எனது மகன் முரளிதாஸ் உயர் கல்வி கற்பதற்காக மூன்றரை வருட வீசாவில் ஐக்கிய ராச்சியத்துக்கு சென்றிருந்தார். அவர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் கூட்டுறவு பரிசோதகராக மட்டக்களப்பில் கடமையாற்றியிருந்தார்.
மட்டக்களப்பு சிவானந்தா தேசியப் பாடசாலையின் பழைய மாணவரான இவர் கல்லடியைச் சேர்ந்த பி.சுபாஜினியை பதிவுத் திருமணமும் செய்திருந்தார்.
தான் கல்வி கற்பதாகவும் விடுமுறை நேரங்களில் வேலைக்குச் செல்வதாகவும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அடிக்கடி எங்களுடன் தொடர்பு கொள்ளும் போது தெரிவித்தும் இருந்தார். அத்துடன் அவரது மனைவியுடனும் சந்தோசமாக உரையாடி வருவது வழக்கமாகும்.
கல்லூரியில் கல்வி கற்பதாகவும் விடுதியில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இவர் கடைசியாக மனைவியுடன் கடந்த 8ம் திகதி இரவு 8.30 மணிக:கு உரையாடியுள்ளார்.
அத்துடன் குறித்த கல்லூரியில் கல்வி கற்பதாகவும் கல்லூரியில் இணைப்பாளராக வேலை செய்வது தொடர்பான செய்திகளும் வீடியோ கிளிப்களும் கல்லூரி இணையத்தளத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 9ம் திகதி லண்டனிலுள்ள மல்லிகா (சந்திரா) என்பவர் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு பி.ப 4.30 மணியளவில் எனது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறிவித்திருந்தார்.
அச் செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியும் கவலையுமடைந்தோம். இந் நிலையில்இலங்கை அரசோ இங்கிலாந்து அரசோ எங்களுக்கு எந்தவிதமான அறிவித்தலையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனது மகன் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த விதமான காரணமும் இல்லாத நிலையில்அவரது மரணத்தை தற்கொலை என எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
எனவே எனது மகனின் மரணம் தொடர்பாக பூரண விசாரணை நடத்தி அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கும் எனது மகனின் உடலத்தை உடனடியாக இலங்கைக்குக் கொண்டு வருவதற்கும் முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே இவற்றுக்கு ஆவன செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.