மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் இன்று (04.05.2012)வெள்ளிக்கிழமை காலை முதல் வகுப்புக்களை பகிஷ்கரித்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளரை உடனடியாக இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே மாணவர்கள் இந்த ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"சிரேஷ்ட உதவி பதிவாளரினால் எந்த விதமான அபிவிருத்தி வேலைகளும் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றவில்லை. அத்துடன் மாணவர்களின் நலன்களில் இவர் அக்கறை செலுத்தவில்லை. இதனாலேயே குறித்த உதவி பதிவாளரை உடனடியாக இடமாற்ற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக" மாணவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இதேவேளைஇ சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமாரை தொடர்புகொண்ட போது
"கூட்டமொன்றுக்காக கொழும்பில் தங்கியுள்ளேன். இம்மாணவர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றேன். இந்நிலையத்தின் பணிப்பாளராக நான் பதியேற்று ஒருவாரமே கடந்துள்ளன. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவை" என்றார். புதிய பணிப்பாளராக கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதில் உப வேந்தர் கலாநிதி பிரேம்குமார் அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் கடந்த மாதம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதனையடுத்து பணிப்பாளர் இடமாற்றப்பட்டமையும் குறிப்பிடதக்கது