5/08/2012

| |

ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் பதவியேற்றார்

ரஷ்யாவின் புதிய அதிபராக விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
தலைநகர் மாஸ்கோவில் பெருஞ்செலவில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த ஆடம்பர விழாவில் அதிபர் புடின் பதவியேற்பு உரையை நிகழ்த்தினார்.
பிரதமராக பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டு கால இடவெளிக்குப் பின்னர், புடின் மீண்டும் அதிபர் நாற்காலியில் இன்று அமர்கிறார்.
இப்போது பதவி முடிந்து செல்லும் அதிபர் டிமிட்ரி மெட்வடேவும் விலாடிமிர் புடின் ஆதரவு-ஆளாகத்தான் பொதுவாக பார்க்கப்பட்டார்.
கடந்த மார்ச்சில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தேர்தலில் புடின் மூன்றாவது தடவையும் அதிபராக தெரிவானார்.
பதவிப் பிரமாணத்தின் போது பேசிய விளாடிமிர் புடின், ரஷ்யா தேசிய அபிவிருத்திக்கான புதிய தளமொன்றுக்குள் பிரவேசிப்பதாகக் கூறினார்.
'புதிய மட்டத்தில், புதிய தரத்தில், புதிய பரிமாணத்தில் காரியங்களை நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகள் ரஷ்யாவின் பல தசாப்தங்களுக்கான தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது' என்று ரஷ்யாவின் புதிய அதிபர் முழங்கினார்.
முன்னாள் சோவியட் அதிபர் மிஹாய்ல் கொர்ப்பச்செவ், முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெரலஸ்கோனி உட்பட இன்னும் பல தலைவர்களும் க்ரெம்ளின் மாளிகையில் நடந்த புடினின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.