International Tamil Writers Forum
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
P.O.BOX 350,Craigieburn,Vic-3064 ,AUSTRALIA T.Ph:
E.Mail:international.twfes@yahoo.com.au
ஊடக அறிக்கை:
இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?
போருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெறவேண்டாமா?
இலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் !
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.
இலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால் முதலில் தமிழ்நாட்டிலிருந்தே எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.
2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது.எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில சிற்றிதழ் ஆசிரியர்களுமாக சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலருந்து வந்து கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.
இதேவிதமாகவே தற்போதும் நாளை ஜூன் 1 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஆரம்பமாகவுள்ள பாரதி விழா, மற்றும் இலக்கிய மாநாட்டிற்கும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
பல மாதகாலமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் ஆலோசித்து நடைபெறுவதே நாளை ஆரம்பமாகும் நிகழ்ச்சி.
தமிழ்ச்சங்கத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதன் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டே பாரதிவிழாவும் இலக்கிய மாநாடும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது என்று இதுவரையில் வெளியான அனைத்து செய்திகளும் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வை.கோபாலசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையும் புலவர் புலமைப்பித்தன் உட்பட சுமார் 50 படைப்பாளிகள், கலைஞர்கள். வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தமிழ்ச்சங்க மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாகச்சொல்கின்றன.
இதில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு தெரிவித்த எதிர்ப்பு அலைதான் மீண்டும் எழுந்திருக்கிறது.
கொழும்பு தமிழ்ச்சங்கம் கடந்த 70 வருட காலத்துள் எத்தனையோ தமிழ் விழாக்களை, மாநாடுகளை, இலக்கிய சந்திப்புகளை, நூல் வெளியீடுகளை நடத்தியிருக்கிறது. அவற்றில் தமிழக அறிஞர்கள், படைப்பாளிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சங்கத்தில் நீண்டகாலமாக இயங்கும் பெறுமதி மிக்க நூல் நிலையத்திற்கு திராவிட பாரம்பரியத்தில் வந்த தமிழக அரசும் பெருமளவு நூல்களை ஏற்கனவே வழங்கியிருக்கிறது.
தற்போது படைப்பாளிகள் சார்பில் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழக எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் தமிழ்ச்சங்க நிகழ்வில் 2010 ஆம் ஆண்டு கலந்துகொண்டவர்தான். இலங்கையில் 1958, 1977, 1981, 1983 ஆகிய காலப்பகுதிகளில் இனவாத வன்செயல்கள் நடந்தன. அப்பொழுது தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள வெள்ளவத்தை உட்பட அதன் சுற்றுப்பிரதேசங்களிலெல்லாம் வன்செயல்கள் நடந்தன. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்டார்கள். அகதிகளாகி இடம்பெயர்ந்தார்கள்.
எனினும் கொழும்பு தமிழ்ச்சங்கம் இந்த வன்முறைகளினால் அழிந்துவிடவில்லை. அதன் பணிகள் தடைப்படவில்லை. தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி சிங்கள எழுத்தாளர்களும் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி ஒரு தாய்மக்கள் போன்று உறவாடி கருத்துப்பரிமாற்றம் செய்கிறார்கள்.
அரசாங்கங்கள் வரலாம் போகலாம். ஆட்சித்தலைவர்கள் மாறலாம். இனவாத வன்செயல்களும் கடந்துசெல்லும் மேகங்கள் போன்று வந்துபோகலாம். ஆனால் இலங்கையில் தமிழும் தமிழர்களும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.அதனால்தான் 80 ஆண்டுகளைக்கடந்தும் வீரகேசரி கொழும்பிலிருந்து இன்னமும் தங்கு தடையின்றி வெளியாகிக்கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்ப்பாடசாலைகள் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயங்குகின்றன.
இந்த யதார்த்த உண்மைகளை குறிப்பிட்ட ஐம்பது பேர் கருத்துச்சொல்லும் தமிழக படைப்பாளிகள் இயக்கமும் மறுமலர்ச்சி தி.முக. தலைவரும் ஏன் ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின்னர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியிருந்த இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்து வந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். தமது உறவுகளையும் சந்தித்து திருமணம் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்கள்.
யாழ்;ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்திலும் விரதம் இருந்து வந்து கலந்து பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே யுத்தம் நிகழ்ந்த முல்லைத்தீவுப்பிரதேசத்தில் வற்றாப்பளை அம்மன் கோயில் பொங்கலுக்கும் நயினை நாகபூஷணி அம்பாள் திருவிழாவுக்கும் வருகைதருகிறார்கள்.
கொழும்பில் ஆடிவேல் விழாவையும் தரிசிக்கிறார்கள். இந்நிகழ்வுகளுக்கு தமிழக நாதஸ்வர வித்துவான்களும் கொழும்பு கம்பன் விழாவுக்கு தமிழக அறிஞர்களும் வந்து சிறப்பிக்கிறார்கள். அத்துடன் தமிழகத்திலிருந்து தினமும் பலர் வந்து திரும்பிக்கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களில் சாதாரண மக்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், சோதிடர்கள், சாமியார்கள், துறவிகள், வியாபாரிகள் உட்பட பலர் அடங்குவர். ஆனால் அதற்கெல்லாம் எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காதவர்கள் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் புறப்பட்டால் மாத்திரம் எதிர்ப்புத்தெரிவிப்பது ஏன்?
ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழக படைப்பாளிகளுக்கும் இடையில் நட்பும் உறவும் ஆரோக்கியமாக வளர்ந்துவிடக்கூடாது என நினைக்கிறார்களா? அல்லது இலங்கையில் தமிழ் இலக்கியம் போருக்குப்பின்னர் புத்துயிர் பெற்றுவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார்களா?
நீண்ட காலமாக நீடித்த இந்த கலை, இலக்கிய உறவுப்பாலத்;தை தகர்த்nறிவதில்; அவர்களுக்கு அப்படியென்ன வக்கிரமான திருப்தி.
தமிழக படைப்பாளிகள் இயக்கத்தின் அறிக்கையையும் வைகோவின் அறிக்கையையும் பார்த்த பின்பு உடனடியாகவே கொழும்பில் பாரதி விழாவும் இலக்கிய மாநாடும் நடத்தும் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. மு. கதிர்காமநாதனுடனும் இந்நிகழ்வுகளின் இலக்கிய இணைப்புச்செயலாளர் ஞானம் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனுடனும் தொடர்புகொண்டேன்.
ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகவும் மாநாட்டு அமைப்புக்குழுவின் தலைவராகவும் பணியாற்றிய ஞானசேகரன் மிகவும் நிதானமாக, “சரியான உண்மையை புரிந்துகொள்ளாமல் பொறுப்பற்று கருத்துச்சொல்கிறார்கள். எமது சர்வதேச மாநாட்டிற்கும் இப்படித்தானே அவதூறு கற்பித்தார்கள். எனினும் அவர்களது பொய்ப்பிரசாரத்தை முறியடித்து திட்டமிட்டவாறு குறிப்பிட்ட மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறோம். அதுபோன்று தமிழ்ச்சங்கம் தற்போது நடத்தவுள்ள மாநாடும் திட்டமிட்டவாறு நடைபெறும்” என்றார்.
சங்கத்தலைவர் கதிர்காமநாதனும் மிக நிதானமாகவே பதில் சொன்னார். வைகோ, சங்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும். சங்கம் அரசியல் கலப்பில்லாதது. அரசாங்கங்களின் ஆதரவுடன் சங்கம் என்றைக்கும் இயங்கியதும் இல்லை என்றும் இதுதொடர்பாக மாநாட்டு அமைப்புக்குழு கூடிப்பேசும் என்றும் தெரிவித்தார்.
“வைகோவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சங்கத்தின் வரலாற்றை சுருக்கமாகவும் பாரதிவிழாவினதும் இலக்கிய மாநாட்டினதும் நோக்கத்தை தெளிவுபடுத்துமாறும் அவருக்குச்சொன்னேன்.
பின்னர் தமிழகத்தில் சிற்றிதழ் சங்கத்தலைவர் வதிலை பிரபாவுடன் தொடர்புகொண்டு வைகோவின் தொலைபேசி இலக்கம்பெற்றேன். அவரது இல்;லத்திலிருந்து, “அவர் திருச்சிக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்வதாக” தகவல் கிடைத்தது. வைகோவின் கட்சி அலுவலகத்தில் தொடர்புகொண்டேன். பின்னர் அவரது பொதுமக்கள் தொடர்பு ஊழியரை தொடர்புகொண்டேன் எனினும் இந்த ஆக்கம் எழுதும் வரையில் வைகோவுடன் பேச முடியவில்லை. தொடர்ந்து முயற்சிப்பேன்.
ஏற்கனவே நாம் 2011 இல் மாநாடு நடத்தியபோது தமிழகத்திலிருந்து எதிர்வினைகள் தொடங்கியதும் கோவை ஞானி, பொன்னீலன், தி.க.சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், ராமகிருஷ்ணன் உட்பட பல முன்னணி படைப்பாளிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எம்மவரின் நிலைப்பாட்டை விளக்கநேர்ந்தது. அத்துடன் தமிழக இதழ்கள் சிலவற்றிலும் நேர்காணல்கள், மற்றும் கட்டுரைகள் வாயிலாக விளக்கநேர்ந்தது.
செயப்பிரகாசம் உட்பட பல தமிழக படைப்பாளிகளுக்கு நாம் ஏற்கனவே அளித்துள்ள விளக்கமும் 2011 இல் இலங்கை அரசினதோ அரசியல்வாதிகளினதோ ஆதரவு எதுவுமின்றி படைப்பாளிகள், கலைஞர்கள், தமிழ் அபிமானிகளின் நிதிப்பங்களிப்புடன்தான் மாநாடு வெற்றிகரமாக தரமாக நடந்து முடிந்தது என்பதும் அது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதும் நன்கு தெரியும்.
அதனால் மீண்டும் மீண்டும் இப்படியே நாம் விளக்கிக்கொண்டிருந்தாலும்கூட, இலங்கையில் இலங்கையர்களினால் நடத்தப்படும் எந்தவொரு தமிழ் மாநாட்டிற்கும் அவர்கள் சிங்கள அரசியல் சாயம் பூசிக்கொண்டுதானிருப்பார்கள். தமிழகத்திலிருந்து வரவிரும்புபவர்களை செல்ல விடாமல் தடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
அதனால் இலங்கை தமிழ் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் மற்றும் தமிழ் மாநாடுகளை ஒழுங்குசெய்யும் தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புகளும், தமிழகத்தின் எதிர்ப்புக்குரலை அலட்சியம் செய்துவிட்டு பணிகளை தொடரவேண்டியதுதான் அவர்களுக்கு வழங்கும் அமைதியான பதிலாக இருக்கமுடியும்.
ராஜபக்ஷாவின் அரசாங்கம் பதவியிலிருக்கும் வரையில் இலங்கைத்தமிழன் தமிழின் பெயரால் விழாவோ, மாநாடோ ஒழுங்கு செய்யாமல் வரண்டுபோய்விடவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்போ தெரியவில்லை.
இதற்கு காலம் பதில் சொல்லுமா? அல்லது வழக்கம்போன்று காலம் இதனையெல்லாம் மறந்துவிடுமா?
முருகபூபதி
அமைப்பாளர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
அவுஸ்திரேலியா.
அமைப்பாளர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
அவுஸ்திரேலியா.