இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவொன்று இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தது.
ஜீன் லம்பட் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் , மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பி மலை கிராமத்திற்கு சென்று ஐரோப்பிய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர்.
அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் குடும்பிமலை குளத்தையும் பார்வையிட்ட இக்குழுவினர் , குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.
இதையடுத்து இன்று மாலை ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.
இதன் போது மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமயில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பிரதேச செயலாளர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பான இணையத்தின் தலைவர் எம்.அமலநதாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் ஐரோப்பிய நிதிதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதய நிலைமை தொடர்பாகவும் ஐரோப்பிய தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.