"இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு, "டெசோ' அமைப்பு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, மத்திய அரசின் ஆதரவைப் பெற முயற்சி எடுக்கப்படும்,'' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில், 1983ம் ஆண்டு, "டெசோ' (தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கழகம்) அமைப்பை கருணாநிதி துவங்கினார். சிறிது காலம் செயல்பட்ட இந்த அமைப்பு, பின் முடங்கிப் போனது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி சென்னைபொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, இலங்கையில் மீண்டும் தமிழ் ஈழம் அமைய மீண்டும், "டெசோ' அமைப்பை துவக்குவதாகவும் அறிவித்தார்.
தி.மு.க., தலைவரின், "திடீர்' தமிழ் ஈழ கோஷம் மற்றும் "டெசோ' அமைப்பு துவக்கத்தை நாடகம் என்று விமர்சித்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், அவற்றிற்கு ஆதரவளிக்கவோ, அதில் இணையவோ விரும்பவில்லை எனத் தெரிவித்தன.
முதல் கூட்டம் :இந்நிலையில், "டெசோ' அமைப்பின் முதல் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழ் ஈழம் அமைவதைத் தவிர, வேறு தீர்வு இல்லை என்ற நிலையை, உலக நாடுகள் உணரச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ் ஈழம் விரைவில் அமைய, ஐக்கிய நாடுகள் சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்; அதற்கு, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவு பெற முயற்சி:கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய கருணாநிதி, ""ஆட்சியில் இருந்த போதும், இலங்கைத் தமிழர்களுக்காக போராடியிருக்கிறோம். தமிழர்களைக் கொன்றதால், இந்திய அமைதிப் படையை நான் முதல்வராக இருந்தபோது வரவேற்கச் செல்லவில்லை. ஜனநாயக ரீதியில், அறவழியில் இந்த போராட்டம் துவங்கப்பட்டுள்ளது. எங்களது முயற்சிக்கு மத்திய அரசின் ஆதரவு பெற முயற்சிக்கிறோம். எங்களது முயற்சியால் தான், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை, மத்திய அரசு எடுத்தது,'' என்றார்.