5/03/2012

| |

ஒபாமா ஆப்கானுக்கு திடீர் விஜயம்: ஜனாதிபதி கர்சாயியுடன் உடன்படிக்கை

இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் முடியும் தருவாயை எட்டியுள்ளதாக ஒபாமா அறிவித்துள்ளார். “ஒரு புதிய தினத்திற்காக அடி வானத்தில் இருந்து வெளிச்சம் தோன்றுவதை எம்மால் பார்க்க முடிகிறது’’ என்று ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஒபாமா குறிப்பிட்டார். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடையும் நிலையிலேயே ஒபாமா ஆப்கான் பயணம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
“அல் கொய்தா அமைப்பை அழிப்பதே எமது இலக்கு. அதற்கான அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம்” என்று ஆப்கானில் பக்ரா விமான தளத்தில் அமெரிக்க வீரர்களுக்கு முன் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
முன்னதாக பராக் ஒபாமா நேற்று முன்தினம் இரவும் ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்சாயியை சந்தித்தார். இதன் போது இருவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதில் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 ஆம் ஆண்டில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவது குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவுகள் குறித்தும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் 2014 ஆம் ஆண்டு ஆப்கானிலிருந்து சர்வதேச படைகள் வெளியேறியதன் பின்னரும் அமெரிக்க துருப்புகள் ஆப்கான் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் முகமாக அங்கு தரித்திருப்பது குறித்த இணக்கப்பாடும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன் எஞ்சியுள்ள அல் கொய்தா வீரர்களை இலக்கு வைத்து 2014 க்கு பின்னரும் அமெரிக்க படைகளை ஆப்கானில் நிலை நிறுத்துவது குறித்தும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதில் 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானை அமெரிக்காவின் சிறந்த உறவு நாடாக உருவாக்குவது குறித்தும் இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி ஆப்கானுக்கு வருடாந்த நிதி வழங்குதல் மற்றும் ஆப்கான் பாதுகாப்பு படையினரின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அதற்கு பயிற்சி மற்றும் உபகரண உதவிகளை வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தவிர, ஆப்கானில் வெளிநாட்டு முதலீட்டை உக்குவிக்க ஊழலுக்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படவும் இந்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
“இந்த ஒப்பந்தம் கடந்த 10 ஆண்டு நிகழ்வுகளையும் முடிவுக்கு கொண்டுவந்து புதிய உறவை ஆரம்பிக்கிறது. இந்த ஒப்பந்தம் இரு இறையான்மை கொண்ட சுதந்திரம் பெற்ற நாடுகளின் கெளரவமான உடன்படிக்கை” என ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பராக் ஒபாமா ஆப்கானில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேரடியாக உரையாற்றினார். அதில் “எமது தேசிய பாதுகாப்பிற்கான இலக்கு எட்டப்பட்டதன் பின்னரும் ஒரு நாள் கூட அமெரிக்க மக்களுக்கு பாதகமாக செயற்பட மாட்டேன். ஆனால் ஆப்கானில் நாம் ஆரம்பித்த செயற்பாட்டை பொறுப்புடன் முடிக்கும் கடமை எமக்கு உள்ளது” என்றார். இதில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்தே ஜனாதிபதி ஒபாமாவின் உரை இருந்ததாக பரவலாக கூறப்பட்டது.
ஆப்கானில் தற்போதுள்ள 88000 அமெரிக்க வீரர்களில் 23000 பேர் இந்த ஆண்டு இறுதியில் நாடு திரும்பவுள்ளனர். அதே போன்று எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுடன் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வாபஸ் பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது.அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் விஜயத்தையொட்டி ஆப்கான் தலைநகர் காபுலில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் காபுலுக்கு பிரதான பாதையின் ஜலாலாபாத்திற்கு அருகில் முதலாவது குண்டுவெடிப்பு நேற்று காலை இடம்பெற்றுள்ளது. தற்கொலைப் படை நடத்திய இந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கான் உள்துறை அமைச்சின் பேச்சாளர் சதிக் சதிகி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு படையினர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று ஆப்கானின் கிழக்கு மாகாணமான தலைநகரில் உள்ள கிரீன்வில்லேஜ் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஆப்கானில் இருந்து வெளியேறி ஒரு சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதல்களுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் வருகையை ஒட்டியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது.
இதன்போது தலைநகர் காபுலில் மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருப்போர் கூறியுள்ளனர். இத்தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளதோடு, 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோருள் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
‘இந்த தாக்குதல்கள் ஒபாமாவும் அவரது படைகளும் ஆப்கானில் ஒருபோதும் வரவேற்கப்படமாட்டார்கள் என நாம் விடுத்த செய்தியாகும். ஆக்கிரமிப்பாளர்கள் கொல்லப்படும் வரை அல்லது எமது நாட்டில் இருந்து வெளியேறும் வரை இந்த தாக்குதல்கள் தொடரும்’ என தலிபான் அமைப்பின் பேச்சாளர் சுலைஹுல்லா முஜாஹிதீன் குறிப்பிட்டார்.