5/03/2012

| |

மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் நிர்வாக சபைக் கூட்டத்தில் நாட்டில் மதஸ்தலங்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள், பலாத்காரங்களுக்கு எதிராக கண்டனத்தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில், மதஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நெருக்குவாரங்கள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இணையத்தின் உப தலைவர் கமலதாஸ் முன்மொழிய, உப செயலாளர் சள்மா ஹம்சா வழிமொழிய இத்தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தில், அண்மைக்காலமாக நாட்டில் பரவலாக மதஸ்த்தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. பலாத்காரமாக அழிக்கப்படுவது, அல்லது புதிய ஆலயங்கள் உள்ளூர் மக்களுடைய அபிப்பிராயங்களுக்கு எதிராக கட்டப்படுவது போன்ற விடயங்கள் கவனத்தில்கொள்ளப்பட்டன.
இதை மேலும் சீர்கெட வைக்கும் வகையில், தம்புள்ளை விகாரை மதகுரு தலைமையில் தம்புள்ளை பள்ளிவாசல் மீது வன்முறையும் அரசியல் நிர்ப்பந்தமும் பிரயோகிக்கப்பட்டமை நாட்டின் நல்லிணக்கத்திற்கான நிரந்தர சமாதானத்துக்கான செயற்பாடுகளை சீர்குலைக்கின்றதாக அமையும்.
அத்துடன், சிறுபான்மை மக்கள் மத்தியில், பெரும்பான்னமை மக்கள் மீது ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதுமாகக் கருதப்பட்டு இந்த விடயத்தினை இணையம் வன்மையாகக் கண்டிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாக சபைக் கூட்டத்தில், செயலாளர் வி.ரமேஸானந்தன், பொருளாளார் எம்.பிரேம்குமார், உறுப்பினர்களான சச்சிதானந்தன், தயாபரன், கே.தேவராஜன், எஸ்.செல்வரெட்டணம், உட்பட நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.