கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இச் சந்திப்பின் போது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் இந்திய அரசாங்கத்தினால் செய்யக்கூடிய உதவிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.
முக்கியமாக, கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலானந்த இசைநடனக் கல்லூரியின் அபிவிருத்திகள் சார்ந்து இந்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்திட்டங்களை மேற்கொள்ளல் அதன் ஆசிரியர்களின் மேற்படிப்புகள் புலமைப்பரிசில்களை ஏற்படுத்தல்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல் மற்றும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கற்றல் மற்றும் ஏனைய தேவைகள் கருதி வாகன வசதிகளை ஏற்படுத்தித் தரல் ஆகிய விடயங்களை ஏற்படுத்தித் தருதல் தொடர்பில் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்த், விபுலானந்த இசை நடனக் கல்லூரியினை இந்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைத் தான் மேற்கொண்டு தருவதாக உறுதியளித்தார்.
அத்துடன், ஆசிரியர்களின் மேற்படிப்புகள் புலமைப்பரிசில்கள் விடயத்தில் ஏற்கனவே உள்ள புலமைப்பரிசில்களில் விசேடமாக கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும், தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் தான் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
அதே நேரம், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு வாகனங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் உறுதியளித்தார் என உபவேந்தர் தெரிவித்தார்.
அத்துடன், கனடாவிலிருந்து பல்வேறு வாய்ப்புகளையும் தவிர்த்து கிழக்கு மாகாணத்ததிற்கு வருகை தந்து மிகுந்து சுறுசுறுப்புடன் செயற்படுவதற்கு உபவேந்தருக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், பல்கலைக்கழக அபிவிருத்தி தொடர்பில் விரிவான திட்ட அறிக்கை ஒன்றினைத் தனக்குத் தருமாறும் இந்திய உயர்ஸ்தானிகர் உபவேந்தர் கோபிந்தராஜாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.