5/06/2012

| |

இறுதிப் போர் நடந்தவெள்ளாம் முள்ளி வாய்க்கால் ஊடான பாதை முதல் தடவையாக திறக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் இறுதிப் போர் நடந்த பகுதிகளில் ஒன்றான வெள்ளாம் முள்ளி வாய்க்கால் ஊடான பாதை முதல் தடவையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கிறது.
புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் இந்த வீதி வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்கிறது.
இந்த வீதியினூடாக பொதுமக்கள் போக்குவரத்து பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதிக்குள் இறங்கிச் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகின்ற இந்தப் பகுதியில் வீதியினூடாகச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு முன்னர் அனுமதி கிடையாது. ஆனால், இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயத்தின் பின்னர், அது தற்போது பொதுமக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்னதாக இறுதிப் போர் நடந்த புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உட்பட ஏனைய பகுதிகளுக்கு தற்போது பொதுமக்கள் சென்று, அங்கு கைவிடப்பட்டுக் கிடக்கும் தமது வாகனங்களை பார்த்துவர அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள்.
இந்த வீதியில் பொக்கணை, மந்துவில், கரையாம் முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய பகுதிகளினூடாகச் சென்று வந்த எமது வவுனியாச் செய்தியாளர், பொன்னையா மாணிக்கவாசகம், போர் முடிந்து மூன்று வருடங்களின் பின்னரும் அந்தக் கிராமங்கள் ஒரு மயானம் போன்றே காணப்பட்டதாகக் கூறுகிறார்.
கைவிடப்பட்டு சிதைந்துபோன வாகங்களும், இடம்பெயர்ந்த மக்களின் பாத்திர பண்டங்களும் அங்கு இறைந்து கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குண்டுகளால் துளையிடப்பட்ட சில கட்டிடங்களும் ஆங்காங்கு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.