5/24/2012

| |

எகிப்து ஜனாதிபதி தேர்தல்: முதல் நாளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

5 கோடிப் பேர் வாக்களிக்க தகுதி
எகிப்து ஜனாதிபதி தேர்தலின் முதல் நாள் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இரண்டு தினங்கள் கொண்ட தேர்தலில் இன்றைய தினத்திலும் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 5 கோடிப் பேர் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் நாள் வாக்குப்பதிவுகள் ஆரம்பமான காலை 8 மணிக்கு முன்னரே பல வாக்குச்சாவடிகளிலும் வாக்குகளை பதிவுசெய்ய மக்கள் வரிசையில் காத்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதில் எகிப்தின் அலக்சான்ட்ரியா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்குகளை பதிவுசெய்ய நூற்றுக்கணக்கான பெண்கள் வரிசையில் காத்திருந்ததாக அங்கிருக்கும் அல் ஜெkரா ஊடகவியலாளர் செய்தி வெளியிட்டுள்ளார். இதே நிலை தலைநகர் கெய்ரோவிலும் இருந்ததாக அல் ஜkரா கூறியுள்ளது.
எகிப்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் பின்னர் ஆட்சி மாற்றத்தின் கடைசி தேர்தலாக எகிப்து ஜனாதிபதி தேர்தல் கருதப்படுகிறது. மக்கள் எழுச்சிக்கு பின்னர் எகிப்தில் ஆட்சியில் இருக்கும் இராணுவ கவுன்ஸில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஆட்சியை கையளிப்பதாக உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெறாதபட்சத்தில் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு செல்லும். இதன்போது முதல் சுற்றில் முதல் இரு இடங்களையும் பெறும் வேட்பாளர்கள் இரண்டாவது சுற்றில் போட்டியிடவுள்ளனர். இரண்டாவது சுற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்த தேர்தலில் வலுவான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் மொஹமட் மொர்சி, முன்னாள் அரபு லீக் தலைவர் அமர் மூஸா, ஹொஸ்னி முபாரக் அரசின் பிரதமர் அஹமட் ஷபீக் மற்றும் முன்னாள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த அப்துல் மொனைம் அபுல் பது ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
தேர்தல் முடிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.