ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட சரத் பொன்சேகா பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளி யேறினார்.
நீதிமன்றத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையை வந்தடைந்த சரத் பொன்சேகாவின் வாகனம் மெகசின் சிறைச்சாலையின் பின்பக்கமாக அமைந்துள்ள குறுக்கு வீதியொன்றின் ஊடாக வெலிக்கடை சிறைச்சாலையின் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி அதன் பிரதான நுழைவாயில் வழியாக சிறைச்சாலையில் நுழைந்தமை முக்கிய அம்சமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மன்னிப்பின் பின்னர் சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பான கடிதமொன்று ஜனாதிபதி செயலகத்தினால் நீதி அமைச்சிற்கு அனுப்பப்பட்டதுடன் அதன் பிரகாரம் அந்த அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடன் சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கான கடிதம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவு அடங்கிய கடிதத்தின் பிரதி என்பன சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டியிருந்த அக்கடிதம், அவர் வெளிநாடு சென்றுள்ள மையினால் வெலிக்கடை சிறைச்சாலை யின் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப் பட வேண்டும். அவரும் வெளிநாடு சென்றுள்ளமையினால் சிறைச்சாலை ஆணையாளர் (தொழிற்பாடு) அசோக்க ஹப்பு ஆராய்ச்சியிடம் அக்கடிதம் கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர், அசோக்க ஹப்பு ஆராய்ச்சி அக்கடிதத்தை சிறைச்சாலை அத்தியட்சகர் காமினி குலதுங்கவிற்கு பெற்றுக் கொடுத்ததுடன் அதில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு சரத் பொன்சேகா பிற்பகல் 4.50 மணியளவில் சிறைச்சாலையின் பிரதான வாயிலினூடாக வெளியேறினார்.
அதன் போது சரத் பொன்சேகாவினால் சமாதானத்தின் சின்னமான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. நாட்டில் உருவாகியுள்ள சமாதானத்தைத் தாம் மேலும் வலுப்படுத்துவதாக இதன் போது சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
வழக்கு வாபஸ்
சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த இரு மேன்முறையீட்டு வழக்குகளை வாபஸ்பெற சரத் பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு எதிராகவும் சரத் பொன்சேகா மேன்முறையீடு செய்திருந்தார்.
மேற்படி வழக்குகளை வாபஸ் பெறுவதற்காக அவர் தாக்கல் செய்திருந்த இரு மனுக்கள் நேற்று பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தலைமையிலான ஐவரடங்கிய நீதிரசர் குழு முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டது.
மனுதாரர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ்.டி.சில்வா சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில் இருந்து ஜனாதிபதி அவரை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அதனால் மேன்முறையிட்டு நீதிமன்ற வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அவர் கோரினார். ஆனால் குறித்த வழக்குகளை வாபஸ் பெறாமல் விசாரணையை இடைநிறுத்த முடியாது என நீதிபதிகள் குழு தெரிவித்தது.
இதனையடுத்து மேன்முறையீட்டு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதற்கு சட்டமாஅதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னா ண்டோ ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து இரு மனுக்களையும் வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நீதிமன்ற தீர்ப்புக்களின் பிரதிகளை நீதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்புமாறு நீதிமன்றம் பணித்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைக்கு அழைத்துவரப்பட்டார். பிற்பகல் 4.45 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார்.