தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகனின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், பொருளாளர் எம்.தேவராஜன், நிர்வாகச் செயலாளர் ஏ.செல்வேந்திரன், மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை, ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் வினோத், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
பிற்பகல் மூன்று மணியளவில் தன்னாமுனையிலிருந்து ஆரம்பமான மேதின ஊர்வலம் செங்கலடியை சென்றடைந்தது. இவ் ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மோட்டார் வண்டிகள், முச்சக்கரவண்டிகள், பார ஊர்த்திகள், உழவு இயந்திரங்கள் என வாகன தொடரணியும் பெருந்தொகை மக்களும் கலந்துகொண்டனர்.
ஊர்லவலத்தை தொடர்ந்து இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் விசேடமாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வுக்கான ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
தொலைநகலினூடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியினை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொருளாலரும், முதலமைச்சரின் ஊடக செயலாளருமான தேவராஜன் வாசித்தார்.
அச் செய்தியில், 'எனது அன்புக்குரிய தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம், இன்றைய தினம் (நேற்று) உழைக்கும் மக்கள் தினம், சர்வதேச தொழிலாளர் தினம், பாட்டாளிகளின் மே தினம்! உங்கள் தினம்! தொழிலாளர் நலன்களுக்காக உழைப்பவர்கள் ஒன்றுபட்டு பாட்டாளி மக்களின் தினத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தவகையில் நீங்கள், அனைவரும் இன்று மாவடிவேம்பில் ஒன்று கூடியிருக்கிறீர்கள். பல்வேறு கட்சிகளும் பல்வேறு இடங்களில் சுதந்திரமாக மே தின நிகழ்வுகளை இன்று நடத்துகின்றன.
அந்தவகையில் நீங்கள், அனைவரும் இன்று மாவடிவேம்பில் ஒன்று கூடியிருக்கிறீர்கள். பல்வேறு கட்சிகளும் பல்வேறு இடங்களில் சுதந்திரமாக மே தின நிகழ்வுகளை இன்று நடத்துகின்றன.
இந்தச் ஜனநாயக சூழலை வரவேற்று நானும் உங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைகிறேன். இணக்கப்பாடு மிக்க நல்லெண்ண சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும். மக்களிடையிலும், மக்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலும் அது மேலும் மேலும் வளர வேண்டும். அதன் மூலமாகவே நாம் சாதனை படைக்க முடியும். அதற்காக உழைத்து வருகின்ற உங்கள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனை பாராட்டுகிறேன்.
வெளி அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியாமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்கவும், எமது இலங்கைத் தீவை அனைவரும் இணைந்து பாதுகாக்கவும், பிறந்திருக்கும் அமைதியான சூழலை வளர்த்தெடுக்கவும் சகல மக்களும் உறுதியுடன் முன்வர வேண்டும்.
உழைக்கும் மக்களின் உரிமைகளை மதிப்போம்! எமது தாயக தேசத்தை உழைப்பால் உயர்த்துவோம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது