பகுதி - 1
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகளின் போது முதுபெரும் அரசியல்வாதியான இராஜதுரை அவர்கள் அவமதிக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்றுவரை எதுவித கண்டனங்களையும் வெளியிடவில்லை. அரசியல் விமர்சனங்களை எப்படி முன்வைப்பது என்கின்ற அவை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் தலைவர்கள் என்பது ஒருபுறமிருக்க யார் துரோகி? அதை யார் தீர்மானிப்பது. இராஜதுரை எப்படித் துரோகியாவார்? என்பதுபற்றி கேள்விகளை எழுப்புவதோடு துரோகி என்கின்ற ஒற்றைச் சொல்லாடலில் இராஜதுரை போன்றவர்களில் வரலாறுகள் தமிழ் தேசிய பெருங்கதையாடல்களுக்குள் மூடி மறைக்கப்பட்டிருக்கின்ற இத்தருணத்தில் யார் இந்த இராஜதுரை என்பதுபற்றி தமிழ் மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
இலங்கையின் சுந்திரத்திற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் சுதந்திர உணர்வையும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கலாசாரத்தையும் மட்டக்களப்பு மக்களிடம் பரப்புவதில் இருந்து இராஜதுரையின் அரசியல் பிரவேசம் நிகழ்கின்றது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட 6 ஆம் ஜோர்ச் மன்னனின் பிறந்ததின விழா இலங்கையெங்கும் கொண்டாடப்பட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. மட்டக்களப்பு நகரில் அவ்விழா நடாத்தக்கூடாது என்று திட்டமிட்ட பல பள்ளி மாணவர்களுக்கு தலைமையேற்று மட் - மத்தியகல்லூரியின் உயர்தர மாணவனாக இருந்த இராஜதுரை களமிறங்கினார். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. கறுப்புக்கொடிகள் வீதிகளை அலங்கரித்தன. பொலிசாரால் யார் இந்த சதிகாரர்கள் என்ற கேள்வியோடு சம்பந்தப்பட்டவர்கள் தேடப்படுகின்றார்கள். அன்றில் இருந்து மட்டக்களப்பின் ஒரு புரட்சிகர இளைஞனாக இராஜதுரை பரிணமிக்கத் தொடங்கினார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கின்ற பழந்தமிழ் பாராம்பரியம் தமிழ் தேசியக் காவலர்களுக்கு இன்றுவரை அன்னியமாகவே இருக்கின்றது. சாதி பெயர்சொல்லி திட்டடித்திரியும் சண்டித்தனங்களை கண்டிக்கத்தயங்குகின்ற தமிழ் தேசிய ஒற்றுமை இன்றுவரை எம்மை மெய்சிலிர்க்க செய்கிறது. ஆனால் சாதி வேறுபாடுகள் எமது சமூகத்தை பிடித்தாழும் பெருவியாதி என்ற பெரியாரின் கர்ஜனையை அன்றே மட்டக்களப்பு மண்ணில் பிரதிபலிக்க முன்வந்தவர் இராஜதுரைதான். அவர் ஆரம்பித்த “அறிவே கடவுள்” எனும் பகுத்தறிவு இயக்கம் ஏற்படுத்திய சமூக சீர்திருத்தங்கள் பற்பல. பல மதுச்சாலைகள் மூடப்படுவதற்கும், கடவுளின் பெயரால் நிகழ்த்தப்பட்ட மிருக பலிகள் நிறுத்தப்படுவதற்கும், தீமிதித்தல் போன்ற சாதனைகள் எல்லாம் தெய்வங்களின் கிருமைகள் அல்ல பகுத்தறிவின் பாற்பட்டவை என்று நிரூபிப்பதற்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மறுக்கப்பட்டிருந்த பல ஆலயங்களின் கதவுகள் திறக்கப்படுவதற்கும் இராஜதுரை ஆரம்பித்த “அறிவே கடவுள்” எனும் பகுத்தறிவு இயக்கம் கடுமையாக போராடியது. அதற்காக அவர் பட்ட துன்பங்களும் எதிர்கொண்ட சவால்களும் அளவு கணக்கற்றவை. கல்லெறி முதற்கொண்டு தீவைப்பு வரை “அறிவே கடவுள்” இயக்கத்தினரின் பிரசன்னங்களின்போதெல்லாம் பல எதிர்ப்புகள் தோன்றின. பகுத்தறிவு பிரச்சாரத்தை இலங்கை மண்ணில் பாய்ச்ச இராஜதுரை பல பேச்சாளர்களை அழைத்துவந்தார். என்.எஷ்.கிருஷ்ணன்போன்ற பகுத்தறிவு கலைஞர்களை அழைத்துவந்து கலைநிகழ்ச்சிகள் மூலமான விழிப்புணர்வுகளையும் டோபிடோ ஜனார்த்தனம், அருப்புக்கொட்டை இராமசாமி போன்றோர்களை அழைத்துவந்து சுயமரியாதைப் பிரச்சாரங்களையும், மட்டக்களப்பில் மட்டும் அல்ல மலையகத்திலும் பரப்புவதில் இராஜதுரை முன்நின்று உழைத்தார். மாமாங்க ஆலயப்பிரவேச முனைப்பின்போது ஏற்பட்ட எதிர்ப்புகளை வெல்ல ஆலயமுன்றலை ஒரு யுத்தகளமாக்கியது குறித்து இன்றும் பல முதியவர்கள் இராஜதுரையின் தைரியத்தை நினைவு கூருவார்கள்.
இவை அனைத்தும் யாழ்மண்ணில் இடம்பெற்ற சாதியத்துக்கெதிரான வெகுஜன எதிர்ப்பு போராட்டங்களைக் கண்டு தமது பங்கிற்கு தமிழரசுக்கட்சியினர் செய்த சாதி எதிர்ப்பு போராட்ட பாசாங்குகளின் ஒரு பகுதியல்ல. கட்சி அரசியலுக்கு வரமுன்னராகவே பெரியார் வகுத்த பகுத்தறிவு, சுயமரியாதைக் கருத்துக்களின் மீது இராஜதுரை கொண்ட பற்றுகளின் காரணமான போராட்டங்களாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை கொடுக்காதே என்று வெள்ளைக்காரனோடும் “ஏழை எளிய” மக்களுக்கெல்லாம் இலவசக்கல்வி எதுக்கு என்று சிங்களவரோடும் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற யாழ்ப்பாணத் தலைமைகள் கட்டைப்பஞ்சாயத்து செய்துகொண்டிருந்தபோது இராஜதுரை மட்டக்களப்பு மண்ணில் செய்த பகுத்தறிவு, சுயமரியாதைப் போராட்டங்கள் ஆகும்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ் நாட்டில் உக்கிரம் பெற்றிருந்தபோது இராஜாஜி தலைமையிலான காங்கிரசு ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர் அவினாசிலிங்கம் என்பவராவார். அவரது மட்டக்களப்ப வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டி பகிஷ்கரிப்பு போராட்டம் நடாத்தியவர் இந்த இராஜதுரையாகும். மட்டக்களப்பானின் தமிழ் உணர்வை அன்று பிரதிபலித்து இந்தியாவரை இச்செய்தியை கொண்டு செல்ல வழிவகுத்தவர் மட்டக்களப்பு வாலிபர் சங்கத்தலைவராக இருந்த இந்த இராஜதுரைதான்.
தென்னிந்தியாவிவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்த ப.ஜீவானந்தத்தை மட்டக்களப்பிற்கும் அழைத்துவந்து கம்யூனிச சித்தாந்த கொள்கைகள் பற்றி உரையாற்றச் செய்தவர் இராஜதுரை. பிராஜவுரிமை சட்டத்தின் ஊடாக 10 லட்சம் தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கி தமது அமைச்சு பதவிகளை காப்பாற்றிக்கொள்ள தமிழ் தேசியத் தலைமைகள் தொழிலாளர் விரோத அரசோடு கூடிக்குலாவிக்கொண்டிருந்தபோது லங்கா சமா சமாஜக் கட்சியின் தாபகர்களில் ஒருவரான என்.எம்.பெரேராவை அழைத்து மட்டக்களப்பு மக்களுக்கு தொழிலாளர்களின் உரிமை பற்றியும், சமதர்மக் கொள்கை பற்றியும் உரையாற்றச் செய்தவர் இந்த இராஜதுரைதான். பிராஜவுரிமைச் சட்டத்தின் மூலம் நாடற்றவர்கள் ஆகியதன் காரணமாக 1952 ஆம் ஆண்டு தேர்தலில் தமது பாராளுமன்ற பிரதிநிதிகளை இழந்துநின்ற மலையக மக்களுக்காக சத்தியாக்கிரகம் செய்து பிரதமரிடம் மனுக்கொடுக்கச் சென்றனர் இலங்கை இந்திய காங்கிரசுக்காறர்கள். அவ்வேளை தொண்டமான், அசீஸ், இராஜலிங்கம், வெள்ளையன் போன்றோருடன் மட்டக்களப்பில் இருந்து தனியாகச் சென்று சத்தியாக்கிரகத்தில் பங்கெடுக்கும் அளவிற்கு இராஜதுரை கொண்டிருந்த தொழிலாளர் வர்க்கம் மீதான அக்கறை அபரீதமானது.
செயற்பாட்டு வீரனாக மட்டுமல்ல, கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர் இராஜதுரை. 1948 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் நடாத்திய மாதாந்த பத்திரிகையின் பெயர் “லங்கா முரசு” என்பதாகும். அதனைத் தொடர்ந்து “முழக்கம்”, “தமிழகம்”, “சாந்தி”, “தேன்நாடு”, “பூமாலை”, “உதயசூரியன்” என்கின்ற சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து செயற்பட்டவர். தமது எழுத்து செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ள “இளங்கோ” அச்சகம் எனும் ஒரு அச்சகத்தினை உருவாக்கி மட்டக்களப்பு மண்ணில் வாசிப்பு பாராம்பரியத்திற்கு வளம் சேர்த்தவர் இராஜதுரையாகும். சிறுகதை, கவிதை துறைகளில் மட்டுமல்ல மட்டக்களப்பில் நவீன நாடக முயற்சிகளுக்கான முன்னோடி இந்த இராஜதுரையாகும். கண்ணகி, சங்கிலியன்...... என்று பல மேடை நாடகங்களை இயக்கி அவற்றில் முன்னணிப் பாத்திரங்களை தாமே நடித்ததன் ஊடாக நடிப்புத்துறையிலும் கால் பதித்தவர் இந்த இராஜதுரை. “இலங்கை எழுத்தாளர்கள்” என்கின்ற நூலினை எழுதிய கனக.செந்தில்நாதன் இராஜதுரை பற்றி இவ்வாறு குறிப்பிடுவார். “இராஜதுரை அரசியலுக்கு ஆதாயமானார், இலக்கியத்திற்கு நட்டமானார்”
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் நீண்டகாலமாகவே இனநல்லிணக்கம் பேணப்பட்டுவந்த வரலாற்றைக்கொண்ட பூமியாகவே அது திகழ்ந்து வந்திருக்கிறது. தமிழ், முஸ்லிம், சிங்களம் என்கின்ற அடையாளங்கள் அரசியலில் கூடியளவு தாக்கம் செலுத்தியிருக்கவில்லை. இந்தநிலையில்தான் தமிழ் அரசுக்கட்சி என்கின்ற இன அடையாளத்துடனான அரசியல் கட்சி கிழக்கில் கால் ஊன்றுவதற்கு கடுமையான பிரயத்தனம் பண்ணவேண்டியிருந்தது. தமிழரசுக்கட்சியின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் காங்கிரஷ் கிழக்கு மாகாணத்தில் தனது ஆதரவுத்தளத்தினை உருவாக்க பகிரதப்பிரயத்தனம் பண்ணியும் தோல்வியே தழுவவேண்டியிருந்தது. தமிழ் காங்கிரசுக்கு ஆதரவு தேடி அறிமுகக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்புவிட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலம் மட்டக்களப்பு மக்களிடம் கூழ்முட்டை எறிவாங்கி திரும்பிச் செல்லவேண்டியிருந்தது. தமிழ் காங்கிரசின் மட்டக்களப்புக்கிளை அங்குரார்ப்பணக் கூட்டம் மட்டக்களப்பு “வெல்காசிம் மண்டபத்தில்” இடம்பெற்றபோதே மட்டக்களப்பு நல்லையா தலைமையில் திரண்ட பொதுமக்கள் “யாழ்ப்பாணத்தானுக்கு இங்கே என்னடா வேலை” என்று கலகம் செய்து ஜீ.ஜீ.பொன்னம்பலத்திற்கு கூழ்முட்டை வீசினர். இதன்காரணமாக தமிழ் காங்கிரஷ் கிழக்கு மாகாணத்தை நோக்கிய தமது கட்சி விஷ்தரிப்பு வேலைத்திட்டங்களை கைவிடவேண்டியதாயிற்று.
மட்டக்களப்பில் 1947 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் கூட யாழ் எதிர்ப்பு மனநிலை பாரிய தாக்கம் செலுத்தியது. மட்டக்களப்பில் போட்டியிட்ட கே.வி.எம்.சுப்பிரமணியம் எனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வக்கீல் ஒருவர் படுதோல்வியடைய நேரிட்டது. இவர் மட்டக்களப்பு நீதிமன்றத்திலேயே வக்கீலாக இருந்தது மட்டுமல்ல இவரது தந்தையார் மட்டக்களப்பு நகரின் பிரபல வர்த்தகராகவும் பணக்காரராகவும் இருந்தவர். அத்தகைய செல்வாக்குகளையெல்லாம் தாண்டி சுப்பிரமணியத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட “வந்தேறு குடி” பிரச்சாரம் மட்டக்களப்பு மக்களை ஆட்கொண்டது. தமிழனா? முஸ்லிமா? என்பதல்ல “உள்ளுர்காரன்” மேல் எனும் பிரதேச உணர்வு 1947 ஆம் ஆண்டு தேர்தலில் சின்னலெவ்வையை வெற்றியீட்டச் செய்தது.
இதுபோன்றதொரு வரலாற்று பின்னணியில்தான் தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாணத்தில் காலடி எடுத்து வைக்க முனைந்தது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்துநின்று அடுத்து என்னசெய்வது என்கின்ற கேள்வியுடன் எழுந்தகாலம் தொட்டு இராஜதுரை செல்வநாயகத்துடன் இணைந்து செயற்பட தொடங்கினார். புதிய கட்சிக்கான ஆலோசனைகளிலும், கொள்கைத் திட்டங்களை வடிவமைப்பதிலும் தந்தை செல்வாவுடனேயே இருந்து பங்காற்றினார். கொழும்பில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அங்குரார்ப்பண கூட்டத்திற்கு மட்டக்களப்பில் இருந்து கலந்துகொண்ட ஐந்துபேருக்கும் முன்னணியில் இருந்து செயற்பட்டவர் அவர். அவரூடாகவே தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாணத்தில் தமது முதலாவது காலடியை எடுத்து வைத்தது.
1952 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி எதிர்கொண்ட முதலாவது தேர்தல் இடம் பெற்றது. அதற்கான வேட்பாளர்களைத் தேடி மட்டக்களப்பின் மூலை முடுக்கெல்லாம் தந்தை செல்வா பயணித்தார். படித்தவர்கள், பட்டதாரிகள், பணக்காரர்கள், போடிமார்கள் என்று பலரது வீடுவீடாக ஏறி இறங்கிய செல்வநாயகத்துடன் யாரும் முகம்கொடுத்துப் பேசவும் தயாராயிருக்கவில்லை. குறுமண்வெளித்துறையில் இருந்து தோணிமூலம் மண்டூர் சென்ற செல்வநாயகத்தை மண்டூர் மண்ணிலேயே கரையிறங்கவிடாமல் திருப்பியனுப்பியவர்கள் படுவான்கரை மக்கள். அந்தளவிற்கு மாகாணபேதம் ஆழமாயிருந்த காலமது. இறுதியில் கல்குடா தொகுதியில் எஷ்.சிவஞானமும், மட்டக்களப்பு தொகுதியில் ஆர்.பி.கதிர்காமரும் இராஜதுரையின் முகத்திற்காக போட்டியிட முன்வந்தனர். ஆனபோதும் கடைசி நேரத்தில் “யாழ்ப்பாணக் கட்சியில் போட்டியிட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்பதைக் காரணம் காட்டி ஒதுங்கிக்கொண்டார்கள். பட்டிருப்பில் பேருக்குக்கூட யாருமே கிடைக்கவில்லை.
திருகோணமலையில் மட்டும் இராஜவரோதயம் போட்டியிட முன்வந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் யாருமே போட்டியிட முடியாத நிலையில் திருகோணமலை மாவட்ட பிரச்சார வேலைகள் இராஜதுரையிடம் ஒப்படைக்கப்பட்டன. திருகோணமலையில் தமிழரசுக்கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டமே கல்லெறி தாங்கமுடியாது கலைந்து போனது. ஆனாலும் இராஜதுரையின் நெஞ்சுரமும் சொல்வீச்சும் திருகோணமலை மக்களை தமிழரசுக்கட்சியை திரும்பிப்பார்க்க வைத்தது. இராஜவரோதயத்தின் வெற்றிக்காக இராஜதுரை சுமார் அறுபது கூட்டங்களை நடத்தி முடித்தார். தமிழரசுக்கட்சி எதிர்கொண்ட முதலாவது தேர்தலில் தந்தை செல்வா கூட தோற்றுப்போனார். திருகோணமலையில் இராஜவரோதயம் வென்றார். “உன் தீந்தமிழ் பேச்சாலேதான் நாம் திருமலையை வென்றோம்” என்று தந்தை செல்வா இராஜதுரையை பாராட்டினார். இவ்வாறாகத்தான் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சியை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுப்பதில் இராஜதுரை ஆற்றிய பங்கு ஒப்பற்றதாய் இருந்தது. 1952 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலுமாக தலா ஒரு பிரதிநிதியை மட்டும் தமிழரசுக்கட்சி வெல்ல முடிந்தநிலையில் பரந்தளவில் கட்சி தோல்வியையே தழுவியிருந்தது. இவ்வாறானதொரு நிலை இனியொருபோதும் இடம்பெற்றுவிடக்கூடாது என்று பெரும் கவலை கொண்டிருந்த தந்தை செல்வாவுக்கு கிழக்கின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் இராஜதுரையாகும்.