5/11/2012

| |

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதி ஏற்றப்பட்டது

இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதி வியாழக்கிழமை(10.5.12) கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்டுள்ளது
அங்குள்ள ஒலிம்பியா மலைப்பகுதியில், பண்டைகாலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடத்துக்கு அருகே ஹீரா எனும் தெய்வத்தின் சிதிலமடைந்த கோவிலுக்கு முன்னர் உள்ள ஒரு பீடத்தில் வைத்து இந்த ஜோதி ஏற்றப்பட்டது.
பழங்காலத்தில் பெண் பூசாரிகளால் எப்படி சூரிய ஒளியைக் கொண்டு இந்த ஜோதி ஏற்றப்பட்டதோ அதே போன்று, இனோ மெனெகாகி எனும் கிரேக்க நடிகை, பெண் பூசாரி வேடமணிந்து, அதிகாலை சூரிய ஒளியை கொண்டு இந்த ஜோதியை ஏற்றினார்.
பெரிய அளவிலான ஒரு கண்ணாடியில் சூரிய ஒளியை குவியச் செய்து அதன் மூலம் உண்டாகும் வெப்பத்தை வைத்தே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது.

புனிதத்தன்மை

சூரிய ஒளியைக் கொண்டு ஏற்றப்பட்ட ஜோதி வேறு ஒரு குடுவைக்கு மாற்றப்படுகிறது
ஒலிம்பிக் ஜோதியின் புனிதத் தன்மையை உறுதிப்படுத்தவே, இது சூரியக் கதிர்களைக் கொண்டே ஏற்றப்படுகிறது.
பண்டைய கிரேக்கர்கள் தீயை தெய்வத்தன்மை வாய்ந்த ஒன்றாகக் கருதி, அதை தமது முக்கிய ஆலயங்களின் முன்னர் தொடர்ந்து எரியும் வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
மனிதனுக்கும் நெருப்பினால் ஏற்படக்கூடிய சாதகமான விஷயங்களுக்கும் இருக்கும் தொடர்பையே ஒலிம்பிக் ஜோதி தற்காலத்தில் நடைபெறும் விளையாட்டுகளில் எடுத்துக்காட்டுகிறது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் கூறுகிறது.
மேலும் ஒலிம்பிக் ஜோதியின் பயணம், ஒலிம்பியாவிலிருந்து தொடங்குவது என்பது பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கும், தற்கால போட்டிகளுக்கும் இடையேயான ஆழ்ந்த தொடர்பை வெளிக்காட்டுகிறது எனவும் அந்த சம்மேளனம் தெரிவிக்கிறது

சமாதானச் செய்தி

முதலில் ஏந்திச் செல்பவரிடம் ஜோதி கையளிக்கப்படுகிறது
ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வருபவர்கள் அதன் பயணம் முழுவதிலும் சமானத்துக்கான செய்தியை சுமந்து செல்கிறார்கள்.
ஒலிம்பியாவில் ஜோதியை ஏற்றும் பணியை கிரேக்க நாட்டின் ஹெலினிக் ஒலிம்பிக் சங்கமே கையாள்கிறது.அந்தக் குழுவே தொடர் ஒட்டத்தின் மூலம் ஏதன்ஸ் நகருக்கு கொண்டுவரும் நடவடிக்கையை ஏற்பாடு செய்கிறது.
அதன் பிறகு அந்த ஜோதியை ஒலிம்பியாவிலிருந்து போட்டிகள் நடைபெறும் நாட்டிலுள்ள முக்கிய விளையாட்டு அரங்கத்தில் ஏற்றி வைக்க எடுத்து செல்லும் பொறுப்பு, போட்டிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.
கிரேக்கத்தில் இந்த ஜோதி தொடரோட்டமாக சுமார் 2,900 கிலோமீட்டர்கள் பயணம் செய்கிறது, 500 பேர் ஜோதியை ஏந்திச் செல்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடி

மேலும் கிரேக்கம் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்பில் சிக்கியுள்ள தருணத்தில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாக கிரேக்கத்தில் பெரிய அளவிலான சமூக அமைதிக்குலைவும் போராட்டாங்களும் இடம்பெற்றன.
ஏழு நாட்கள் கிரேக்கத்தில் பயணிக்கும் ஒலிம்பிக் ஜோதி, இம்மாதம் 17 ஆம் தேதி லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் அமைப்பிடம் கையளிக்கப்படும்.
கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட ஜோதி 18 ஆம் தேதி மாலை உள்ளுர் நேரம் 7 மணிக்கு பிரிட்டனின் தென் மேற்கு கரையோரம் உள்ள லாண்ட்ஸ் எண்ட் எனும் இடத்தை அடைந்து மறுநாள் முதல் நாடெங்கும் கொண்டு செல்லப்படும் நடவடிக்கை தொடங்குகிறது.