5/22/2012

| |

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு கூட்டமா? தங்களுக்கு அறிவிக்கவில்லை கூட்டமைப்புக்குள் விரிசல் வலுக்கிறது !

மகிந்த ராசபக்ச அமைத்துள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதா? இல்லையா? என்ற நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அறிவிக்க இருப்பதாகவும், அதற்கு முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு கூட்டம் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறும் என்றும் கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு கூட்டமா? அப்படி எந்த அறிவித்தலும் எங்களுக்கு கிடைக்கவில்லையே என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் மட்டக்களப்பில் நிற்கிறோம். தமிழரசுக்கட்சி மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம், சுரேஷ் பிரேமச்சந்திரனும், சிறிதரனும் லண்டனில் நிற்கிறார்கள்.
எனவே நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறும் என நான் நினைக்கவில்லை. நாடாளுமன்ற குழு கூட்டத்தை கூட்டாமல் எப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுத்தலைவர் பாராளுமன்றில் அறிக்கை வெளியிட முடியும் என்றும் அரியநேத்திரன் தெரிவித்தார்.பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது பற்றி இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு முடிவு செய்யவில்லை என்றும் அரியநேத்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்காமல் தலைவர் சம்பந்தன் தெரிவுக்குழு தொடர்பாக நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க மாட்டார் என அரியநேத்திரன் நம்பிக்கை கொண்டுள்ள போதிலும் தெரிவுக்குழுவுக்கு செல்வது என சம்பந்தன் முடிவெடுத்துள்ளார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வதற்கான சம்மதத்தை ரணில் விக்கிரமசிங்காவிடமும், மகிந்த ராசபக்சவிடமும் சம்பந்தன் வழங்கி விட்டார் என தெரியவருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வதற்கான சம்மதத்தை தெரிவித்து நாளை சம்பந்தன் நாடாளுமன்றில் அறிக்கை வெளியிட உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.