5/07/2012

| |

கிராமிய அபிவிருத்தியில் முன்வைத்த காலை பின்வைக்க போவதில்லை

புனரமைக்கப்பட்ட 18 வளைவு வீதி அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி
* கொழும்பில் ஆட்சி செய்த தலைவர்களுக்கு 18 வளைவு பாதையின் முக்கியத்துவம் தெரியவில்லை
*  கிராமிய மக்களுக்கு சகல வசதிகளையும் பெற்றுக் கொடுப்பேன்
தலைவர்கள் பலர் கைவைக்க யோசித்த 18 வளைவு பாதையை நாம் இன்று புனர்நிர்மாணம் செய்துள்ளோம். அதுபோன்று நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிலும் நாம் பின்நிற்கப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நகரில் வாழ்ந்த தலைவர்கள் கிராமங்களின் அபிவிருத்தியிலும் மக்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொள்ளவில்லை. அவர்களுக்கு அதற்கான அவசியமும் இருக்கவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, நான் மெதமுலன கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் கிராமிய அபிவிருத்திக்காக முன்வைத்த காலை ஒரு போதும் பின்வைக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
பாதைகள் புனரமைப்புச் செய்யப்படும்போது வீதி விபத்துக்களும் அதிகரிக்கின்றன. அதற்கும் மக்கள் என்னையே குறை கூறுகின்றனர். அதனால் இனி வீதிகளை நிர்மாணிக்கும்போது இரு மருங்கிலும் கண்டிப்பாக மக்களுக்கான நடைபாதை மேடைகளை நிர்மாணிப்பது அவசியம் என நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி-மஹியங்கனை 18 வளைவு பாதை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு உடுதும்பர மைதானத்தில் நடைபெற்றதுடன் அங்கு பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், மாகாண அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி;
18 வளைவு பாதையில் அந்தக் காலத்தில் எனது சிறுவயதில் பல சிரமங்களுடன் பயணித்துள்ளேன். எனினும், இன்று நானே எனது காரை செலுத்தினேன். அதிவேகபாதையில் என்னால் வேகமாக கார் ஓட முடிந்தது. என்னால் 18 வளைவு பாதையிலும் வாகனம் செலுத்த முடியும் என்பதை இன்று உறுதிசெய்து கொண்டேன்.
கடந்த 100 வருடங்களுக்கு முன் இந்தப் பாதையில் பயணிக்கும் போது வாகனம் செலுத்தும் சாரதியின் உடல் பயத்தில் சிலிர்க்கும். அவ்வாறு மிகக் குறுகிய பாதை அது. பல வளைவுகள் இருந்தன. இப்போது அவ்வாறில்லை.
1815ல் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தோமஸ் ஹென்றி என்பவர் 300 ஏக்கரில் கோப்பி உற்பத்தி செய்தார். அக்காலத்தில் போடப்பட்ட பழைய பாதை இதுவாகும், இதனூடாகவே தலதா மாளிகைக்கு மஹியங்கணையிலிருந்து நம்மவர்கள் தேன்கொண்டு சென்றனர்.
ஒரு புறம் தலதா மாளிகை, மறுபுறம் புத்த பெருமான் பாதம் பதித்த மஹியங்கனை. அத்தகைய ஒரு பாதையையே புனரமைத்து நாம் புத்தஜயந்தி 2600 நிறைவு வெசாக்கில் திறந்து வைத்துள்ளோம். இது இப்பகுதி மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும்.
கொழும்பிலிருந்து ஆட்சி செய்த தலைவர்களுக்கு இந்தப் பாதையின் முக்கியத்துவம்தெரியவில்லை. அதனால் இதைக் கவனிக்காமற் போயினர். இந்தப் பிரதேச மக்களையும் அவர்கள் அந்த விதமாகவே பார்த்தனர்.
நகரில் பிறந்து நகரில் வாழ்ந்தவர்களுக்குக் கிராமத்தின் அருமை தெரியாது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராம அபிவிருத்தியின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவன். அதனால் பலர் கைவைக்காத இத்தகைய அபிவிருத்தியை முன்னெடுக்கின்றேன்.
இந்தப் பாதையை அமைத்தது போல நாட்டையும் கட்டியெழுப்புவோம். எமது செயற்பாடுகளை நாம் பின்னோக்கி நர்த்தப் போவதில்லை. முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப நாம் வைத்த கால் முன்னோக்கியே நகரும்.
எமது தலைவர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை. அதனால்தான் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறவில்லை. இந்தப் பாதை மக்களுக்கான வரப்பிரசாதத்தைப்போன்றே இளைஞர்களுக்கு புதிய உலகம் திறந்தது போலாகும்.
எத்தகைய தடைகள் வந்தாலும் நாட்டின் அபிவிருத்தியை நாம் கைவிடப்போவதில்லை. தற்போது நாடு சிறியதாகிவிட்டது. முன்னர் பல மணித்தியாலங்கள் பயணிக்கின்ற பாதைகளில் தற்போது ஓரிரு மணித்தியாலங்களில் பயணிக்க முடிகிறது. பாதைகள் காப்பட் போடப்பட்டு பயணங்கள் மிக இலகுவாகிவிட்டன.
இது வெசாக்காலம். மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கும் காலம். மக்களின் வாழ்க்கை பிரகாசிக்கும் காலம் மக்களின் வாழ்வை சுபீட்சமாக்குவதே எமது நோக்கம். அதற்காகவே சகல செயற்பாடுகளையும் மேற்கொள்கிறோம். விவசாயம் உட்பட சகல தொழிற்சாலைகளுக்கும் சலுகை, மானியம் வழங்குகின்றோம். மக்கள் அதை உணர வேண்டும்.
ஒரு பக்கற் சிகரட் வாங்குவதைவிட குறைந்த செலவில் ஒரு மூட்டை உரத்தை வாங்க முடிகிறது. 7 ஆயிரம் ரூபாவுக்கு வாங்கி நாம் வெறும் 350 ரூபாவிற்கே உரத்தை விநியோகிக்கின்றோம்.
அமெரிக்கா முதலில் இலவசமாகக் கோதுமையை வழங்கியது. பின்னர் கடன்முறையில் வழங்கியது. நாம் பெரும் செலவைச் செய்யவேண்டியிருந்தது.
நாம் தற்போது அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளோம். அது எமக்கு கிடைத்த வெற்றி. உலகில் பால்மா உற்பத்தி நாடுகள் கூட பால் மாவை உபயோகிப்பதில்லை. நாமும் பசுப்பாலை உபயோகிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நாம் பாடசாலை பிள்ளைகளுக்குத் தினமும் பசுப்பால் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
கொழும்பு மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சகல வசதிகளையும் கிராமிய மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பு. நாடு அபிவிருத்திகாணும் அதேவேளை எமது கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களையும் சூழலையும் பாதுகாப்பது எமது பொறுப்பு. அவற்றைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியே அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
எமது நாட்டையும் கலாசாரத்தையும், மரபுரிமைகளையும் காட்டுக்கொடுக்கவோ அபகரிக்கவோ எவருக்கும் இடமளிக்க முடியாது. அவற்றைப் பாதுகாத்துக்கொண்டே அபிவிருத்தி முன்னெடுக்கப்படும். மக்கள் நாட்டைப் பற்றிய சிந்தனையிலிருந்து விடுபட்டுவிடக்கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.