தென் சூடானுடனான ஆபிரிக்க ஒன்றியத்தின் அமைதி முயற்சிக்கு சூடான் ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் தற்பாதுகாப்புக்கு தமக்கு உரிமையுள்ளது என சூடான் அரசு அறிவித்துள்ளது.
மறுபுறத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தின் 7 ஏழு அம்ச அமைதி முயற்சிக்கு தென் சூடான் தமது ஆதரவை நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இதன்படி ஆபிரிக்க ஒன்றியத்தின் அமைதி முயற்சிக்கமைய எதிர்வரும் செவ்வாய் கிழமைக்குள் சூடான், தென்சூடான் நாடுகள் மோதல்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்பவேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இரு நாடுகளும் முரண்பாடுகள் குறித்து இணக்கப்பாடொன்றை எட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் சூடான், தென்சூடானுக்கிடையில் ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சினை, பிரஜைகள் தொடர்பான சர்ச்சை மற்றும் எண்ணெய் விநியோகத்திலுள்ள சிக்கல்கள் தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்ட ஆபிரிக்க ஒன்றியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே சூடான், தென் சூடானுக்கு இடையிலான மோதல்களை 48 மணி நேரத்திற்குள் நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என ஐ.நா. பாதுகாப்புச் சபை கடந்த புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை மீறும் பட்சத்தில் தடைக்கு உள்ளாக வேண்டிவரும் என இரு நாடுகளையும் பாதுகாப்புச் சபை எச்சரித்திருந்தது.
தென் சூடான் இராணுவம் சர்ச்சைக்குரிய ஹெக் லிக் எல்லைப் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஊடுருவியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.