5/04/2012

| |

ஆதிவாசி பெண் எம்.பி. பொலிஸாரால் சித்திரவதை

தான் ஒரு பாராளுமன்ற எம்.பி. என்று கூறியும் தன்னை குஜராத் பொலிசார் கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர் என்று காங்கிரசைச் சேர்ந்த ஆதிவாசி பெண் எம்.பி. ஒருவர் குற்றம் சாட்டி அழுததால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எம்.பி.க்கள் பலரும் வலியுறுத்தினர்.
லோக் சபாவில் நேற்று முன்தினம் ஜீரோ நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பியான கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் பிரதீபா என்ற பெண் எம்.பி.யை சுட்டிக்காட்டி பேசினார். குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியான பிரதீபா, ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்தவர்.
பிரதீபாவுக்கு நடந்ததை விளக்கி கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது குஜராத் மாநிலம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு தனது தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதீபா கிளம்பினார். ஆனால் குஜராத் பொலிசார் அவரை மிரட்டி தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு கடத்திச் சென்றுள்ளனர்.
தான் ஒரு எம்.பி என்றும், பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் கூட பொலிசார் அவரை விடாமல் வைத்திருந்து சித்திரவதை செய்துள்ளனர். பிறகு ஒரு வழியாக அவரை ரயிலில் ஏற்றிவிட்டுள்ளனர். ரத்லம் என்ற ஊரில் தான் ரயிலில் கிளம்பியிருக்க வேண்டும்.
ஆனால் 200 கி. மீ. தூரத்தில் உள்ள பரோடாவில் இருந்து பிரதீபாவை பொலிசார் ரயிலேற்றி விட்டுள்ளனர். இதனால் அவர் அலைக்கழிக்கப்பட்டு மனம் மற்றும் உடல் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆதிவாசி எம்.பியான இவருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே காரணம். அவரது உத்தரவின் பேரில் தான் அனைத்துமே நடந்துள்ளன.
இவ்வாறு கிரிஜா வியாஸ் பேசியதும், காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரும் எழுந்து மோடிக்கு எதிராக குரல் கொடுத்தனர். அவையில் குழப்பம் காணப்பட்டது.
இதையடுத்து எழுந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இதுகுறித்து குஜராத் மாநில முதல்வரிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த சம்பவம் குறித்து முழு தகவல்களும் கிடைத்த பிறகு இது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
இருப்பினும் ஆதிவாசி எம்.பிக்கு அதுபோன்ற அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்சினையை அவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பலாம்' என்றார்.