5/04/2012

| |

மோதலை நிறுத்த சூடான் - தென் சூடானுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை 48 மணிநேர கெடு

சூடான் மற்றும் தென் சூடானுக்கு இடையிலான மோதல்களை நிறுத்துவதற்கு ஐ. நா. பாதுகாப்புச் சபை கெடு விதித்துள்ளது. இரு நாடுகளும் 48 மணி நேரத்திற்குள் மோதல்களை நிறுத்த வேண்டும் அல்லது தடைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என பாதுகாப்புச் சபை எச்சரித்துள்ளது.
நியூயோர்க்கில் நேற்று முன்தினம் கூடிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சூடான் நாடுகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் மோதல்களை நிறுத்துவதற்கான தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யா உட்பட 15 அங்கத்துவ நாடுகளும் ஆதரவளித்தன. ஆபிரிக்க ஒன்றியத்தின் சூடான் நாடுகளுக்கிடையிலான அமைதி முயற்சி திட்டத்தின் அடிப்படையிலேயே பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதில் ஆபிரிக்க ஒன்றியத்தின் தீர்வுத் திட்டத்திற்கு அமைய இரு சூடான் நாடுகளும் யுத்தத்தை நிறுத்தி தமது பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ. நா. தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக தென் சூடான் அறிவித்துள்ளதோடு, தென் சூடானுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சூடான் கூறியுள்ளது.
தென் சூடான் அமைச்சரவை விவகார அமைச்சர் டெங் அலொர் கவுல் கூறும் போது, பாதுகாப்புச் சபை தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம் எமது அரசு இந்த தீர்மானத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.