5/24/2012

| |

* கொழும்பு * அநுராதபுரம் * வவுனியா * மன்னார் தமிழ்க் கைதிகளின் வழக்குகளை துரிதமாக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள்

சட்டமா அதிபர் திணைக்கள வழக்குகளுக்கு விசேட பிரிவு
* இலங்கையில் அரசியல் கைதிகள் கிடையாது
* கைதிகள் தொடர்பில் அரசு மனிதாபிமான செயற்பாடு
* சர்வதேசத்தை தவறாக வழி நடத்த சம்பந்தன் முயற்சி
 
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக ஒரு மாத காலத்தினுள் கொழும்பு, அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் மேல் நீதிமன்றங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுடன் தொடர்புள்ள வழக்கு ஆவணங்களை ஒருமாத காலத்தினுள் நிறைவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தில் விசேட பிரிவொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து அவர்களை விடுதலை செய்யவோ அல்லது வழக்குத் தொடரவோ அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ள முன்னாள் பலி உறுப்பினர்கள் தம்மை விடுதலை செய்யவோ வழக்குகளை துரிதப்படுத்துமாறோ கோரி உண்ணா விரதமிருப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் சபையில் விசேட கூற்றொன்றை வெளியிட்டார். இது தொடர்பான அரசாங்கத்தின் பதிலை வெளியிடுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,
சம்பந்தன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தது போன்று அரசாங்கம் எந்த ஒரு அரசியல் கைதியையும் தடுத்து வைக்கவில்லை. இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது.
புலிகள் இயக்கத்தினால் முன்னெடுக்கப் பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிப்ப வர்களும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு குற் றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டவர்களுமே சிறைகளில் உள்ளனர். குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்ட 359 சந்தேக நபர்களும் வழக்கு தொடர்வதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 309 பேரும் இதில் அடங்குவர். இவர்கள் அரசியல் கைதிகளல்ல. இவர்களை அரசியல் கைதிகளாக காண்பித்து பாராளுமன்றத்தையும் சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்த சம்பந்தன் நடவடிக்கை எடுத்தார். இது குறித்து கவலை அடைகிறோம்.
இவர்களிடையே உள்ள அங்கவீனர்கள் புலிகளுக்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாலே அங்கவீனமடைந்தனர். இவர்கள் அப்பாவி அங்கவீனர்களல்ல. மோசமான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டே இவர்கள் அங்கவீனமுற்றனர். சம்பந்தன் எம்.பி. கூறுவது போல இவர்களை இலகுவாக விடுவிக்க முடியாது.
கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்களிமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட சில முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டனர். மேற்படி நபர்கள் மோசமான பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால் மீண்டும் விசாரணை செய்வதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு அளவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட 359 பேரினதும் விடுதலை தொடர்பான பிணை நீதிமன்றத்தின் பொறுப்பிலே உள்ளது.
நீதிமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி இவர்களை விடுவிக்கும் முறை எதுவும் கிடையாது. நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவில் நிரபராதிகளாக நிரூபணமானால் அவர்கள் விடுவிக்கப்படுவர்.
672 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இது தவிர 2011 ஆரம்பப் பகுதி முதல் பல் வேறு சந்தர்ப்பங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி 241 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த நபர்கள், பிரதேசங்கள் குறித்து தகவல் திரட்டுவது அடங்கலான பல விசாரணைகளை முன்னெடுக்க வேண் டியுள்ளது. இதற்கு கூடுதல் கால அவகா சம் தேவை. அதன் பின்னர் அவர்கள் துரி தமாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர்.
வழக்குத் தொடர எதிர்பார்க்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து அவர்களை விடுவிக்கவோ வழக்கு தொடரவோ அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும். இதற்காக சிறைச்சாலை மற்றும் புனர் வாழ்வு அமைச்சு துரித திட்டமொன்றை தயாரித்துள்ளது.
இதன் பிரகாரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்காக கொழும்பு, அநுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் ஒரு மாத காலத்தினுள் மேல் நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்படும்.
சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள வழக்குத் தொடர்பான ஆவணங்களை ஒரு மாத காலத்தினுள் தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தில் விசேட பிரிவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுய விருப்பத்தின் பேரில் புனர் வாழ்வு பெற விரும்புபவர்களில் தகுதியானவர்களுக்கு துரிதமாக புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் நீதிமன்ற உத்தரவை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைச்சாலையில் உள்ள 668 முன்னாள் புலி உறுப்பினர்களில் 229 பேர் மட்டுமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களை விடுவிக்கவோ துரிதமாக வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கவோ நடவடிக்கை எடுக்குமாறே அவர்கள் கோரியுள்ளனர். இவர்களில் எவரும் நோய் வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. சிலர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 11,696 பேர் இதுவரை சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். 7 புனர்வாழ்வு நிலையங்களில் தற்பொழுது 4 மட்டுமே உள்ளன.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களில் மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வர்களாகும். இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவோ புனர்வாழ்வு அளிக்கவோ அல்லது விடுவிக்கவோ நடவடிக்கை எடுப்பது குறித்து நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம்
கடந்த 2 ஆம் திகதி நடந்த கூட்டத்தில் இவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவது தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 22 ஆம் திகதி நடந்த கூட்டத்தில் அவற்றை ஒரு மாத காலத்தினுள் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.
புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களில் 75 பேர் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி சமூகத்தடன் இணைக்கப்படவுள்ளனர். ஏனையவர்கள் புனர்வாழ்வு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர் விடுவிக்கப்படுவர்.
பரமலிங்கம் தர்மகாந்தன் எனும் மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பு கிடையாது. வடக்கில் இராணுவம் இருப்பதற்கும் இந்த சம்பவத்திற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படும் தறவான கருத்தை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
ஈட்டிய சுதந்திரத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டியது சகல மக்களினதும் பொறுப்பு என ஜனாதிபதி படை வீரர் நினைவு தின விழாவில் கூறியிருந்தார். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்காதிருக்கவே வடக்கு, கிழக்கு பகுதிகளில் படையினர் தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.
இன ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட புலி உறுப்பினர்களுக்குக் கூட புனர்வாழ்வு வழங்க அரசாங்கம் நடவடி க்கை எடுத்து வருகிறது. கைதிகள் தொட ர்பில் மனிதாபிமானமாக அரசாங்கம் செயற் படுகிறது. எஞ்சியுள்ள கைதிகள் தொடர்பில் தேவையான சட்ட செயற்பாடுகள் உட் பட்டதாக துரித நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்