5/14/2012

| |

13 வது திருத்தத்தை ரத்துச் செய்யக் கோரும் தொழில்சார் நிபுணர்கள் அமைப்பு

இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான போதுஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் வகையில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை அடுத்து கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறது.
13 வது திருத்தச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது இலங்கை மக்களுக்கோ தெரியாமல் இந்தியாவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனை நீக்க வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் திலின கிரிங்கொட கூறியுள்ளார்.
13 வது திருத்தச் சட்டம் இலங்கை மீது திணிக்கப்பட்ட ஒன்று என்றும் அது இலங்கையில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது என்றும் பெருமளவு பண விரையத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இன ரீதியிலான அதிகாரப் பகிர்வு
அதேவேளை இலங்கையில் 13 வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வானது இன ரீதியிலான அதிகாரப் பகிர்வு என்றும், ஒன்றுபட்ட இலங்கைக்கு அது பாதகமானது எனவும் அவர் கூறினார்.
13 வது திருத்தச் சட்டத்தை விடுதலைப்புலிகள் ஆதரித்தார்கள் என்றும் அதனால் அதனை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
ஆனால், உண்மையில் விடுதலைப்புலிகள் 13 வது திருத்தச் சட்டத்தினை எதிர்த்திருந்தார்களே, அப்படியிருக்க இப்படியான ஒரு பொய்யைச் சொல்லி சிங்கள மக்களுக்கு தவறான தகவலை கொடுக்க தொழில்சார் நிபுணர்களின் அமைப்பு முயற்சிக்கிறதா என்று பிபிசி சார்பில் கேட்டதற்குப் பதிலளித்த திலின கிரிங்கொட அவர்கள், விடுதலைப்புலிகள் 13 வது திருத்தச் சட்டத்தையோ அல்லது மாகாண சபைகளையோ எதிர்த்தார்கள் என்ற கருத்துடன் தான் முரண்படுவதாகவும், அப்போது அவர்களது யுக்தி வேறாக இருந்தது என்றும் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் போர் புரிவதற்காக இந்திய இராணுவத்தை முடிந்தவரை விரைவாக இலங்கையில் இருந்து அப்போது அகற்ற விரும்பினார்கள் என்றும் அதனால் அனைத்தையும் எதிர்க்கும் ஒருவகை யுக்தியை அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்றும் கூறினார்.