இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் 12 பேர் கொண்ட குழு, கடந்த வாரம் இலங்கையில் மேற்கொண்ட பயணம் குறித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவரித்திருக்கிறார் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்த சுஷ்மா ஸ்வராஜ்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் கடந்த வாரம் இலங்கை சென்றது. தமிழர்களின் மறுவாழ்வு, மீள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த அந்தக் குழு, பொதுமக்களிடமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தியது. இறுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியது.
இந் நிலையில், அந்தப் பயணம் தொடர்பாக, நேற்று மாலை இந்தியப் பிரதமரைச் சந்தித்து சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மதாய் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் உடனிருந்தார்கள்.
அதுதொடர்பாக இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், தங்களது இலங்கைப் பயணத்தின்போது, வடக்கில் ராணுவப் பிரசன்னத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியிடம் பேசியதாகத் தெரிவித்தார். பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு ராணுவத்தினர் அழையா விருந்தாளிகளாக வருவதாகவும், கோயில்களுக்குள் நுழைவதாகவும் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார். மேலும், 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசியதாகவும் சுஷ்மா தெரிவித்தார்.
அதே நேரத்தில், 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசியதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் தவறு என்று, இலங்கை அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தியக் குழுவினர் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசவில்லை என்றும், அதுதொடர்பாக அரசுத் தரப்பில் எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனிடம் கேட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளை மீிண்டும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இடம் பெறச் செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அவ்வாறு பேசும்போது 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாகத்தான் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.