பிரான்ஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தல் வாக்குப் பதிவில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள அதிபர் நிக்கோலா சார்க்கோஸி, அடுத்த கட்டமாக நடக்கவுள்ள இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்க்கோஸி 27.1 வீதமான வாக்குகளையே பெறமுடிந்துள்ளது. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் 28.6 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.
வரும் மே 6ம் திகதி நடக்கவுள்ள இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் நிக்கோலா சார்க்கோஸியும் ஃபிரான்ஸுவா ஒல்லாந்தும் மோதவுள்ளனர்.பிரான்ஸ் வரலாற்றில், பதவியிலிருக்கின்ற அதிபர் ஒருவர் முதற்சுற்று வாக்குப்பதிவில் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவே.
மூன்றாவது இடத்தைப் பெற்ற மரீன் லெ பென், அவரது கடும்போக்கு வலதுசாரி தேசிய முன்னணி இதுவரை பெற்ற உச்சகட்ட ஆதரவாக 18 வீதமான வாக்குகளை வென்றுள்ளார்.
முதல்சுற்றில் ஒல்லாந்த் பெற்றுள்ள மயிரிழை வெற்றி, இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கும் அடுத்தச் சுற்று வாக்குப்பதிவை உத்வேகத்துடன் எதிர்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையை அவருக்கு வழங்கியுள்ளதாக பிரான்ஸிலுள்ள பிபிசி செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.
மரீன் லெ பென்
ஆளும் மத்திய வலதுசாரியான யூஎம்பி கட்சி, அதிபர் சார்க்கோஸியை வெற்றியை எப்படியாவது உறுதி செய்ய வேண்டுமென்ற முயற்சியில் கடும்போக்கு வலதுசாரி மரீன் லெ பென்னை ஆதரித்தவர்களை குறிவைத்து வாக்குவேட்டை நடத்தலாம் என்று அவதானிகள் கூறுகின்றனர்.
இம்முறை பிரான்ஸ் தேர்தலில் வாக்களித்தவர்களில் ஐந்தில் ஒருவர் மரீன் லெ பென்னை ஆதரித்திருக்கிறார்கள். இவர்களில் பெருமளவிலான இளைய தலைமுறையினரும் தொழிலாளர்களும் கூட இருக்கிறார்கள்.
இம்முறை பிரான்ஸ் தேர்தலில் ஐரோப்பாவை பாதித்த பொருளாதாரப் பிரச்சனைகளும் வெளிநாட்டு குறியேறிகள் தொடர்பான விடயங்களும் முக்கிய பிரச்சார விடயங்களாக இருந்தன.
கடும்போக்கு தேசிய வாதத்தையும் வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான பிரச்சாரங்களையும் முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட மரீன் லெ பென், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு பற்றிய தனது நிலைப்பாட்டை வரும் மே தினத்தன்று அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.