பிரான்ஸ் அதிபர் தேர்தலில் அந்நாட்டு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பாவில் யூரோவைப் பயன்படுத்தும் நாடுகளின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துள்ள தொழில் பிரச்சனைகளுக்கு மத்தியில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது.
சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளரான ஃபிரான்ஸுவா ஒல்லாந்திடமிருந்து சார்க்கோஸி கடுமையான போட்டியை சந்தித்துள்ளார்.மத்திய வலதுசாரிக் கட்சியான யூஎம்பி வேட்பாளரான நிக்கோலா சார்க்கோஸி மீண்டும் அதிபராவதற்கு முயற்சிக்கிறார்.
மொத்தத்தில் பத்து வேட்பாளர்கள் போட்டியிடும் இன்றைய வாக்குப்
ஃபிரான்ஸுவா ஒலாந்த்
பதிவில் எவர் ஒருவராவது ஐம்பது சதவீத வாக்குகளைப் பெற்றால் அவர் நேரடியாக அதிபராகத் தெரிவாவார்.
அப்படி யாரும் ஐம்பது சதவீத வாக்குகள் பெறாமல் போனால், இன்றைய வாக்குப்பதிவில் முதல் இரண்டு இடங்களில் வந்தவர்கள் மட்டும் போட்டியிடும் இரண்டாவது சுற்று வாக்குப் பதிவு ஒன்று வரும் மே 6ம் தேதி நடத்தப்படும்.
சர்கோஸியின் வாக்குறுதிகள்
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்துவருகின்ற நிக்கோலா சர்கோஸி, நாட்டின் வரவு செலவுக் கணக்கில் துண்டுவிழும் பெருந்தொகையின் அளவு குறைக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வெளிநாடுகளில் குடியேறுவதன் மூலம் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க முயலுபவர்கள் மீதும் வரிகள் கொண்டுவரப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
அரசுத் துறைகள் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது ஐரோப்பாவுக்குள் தயாராகும் பொருட்களையே வாங்க வேண்டும் என்ற ஒரு கொள்கையை ஏற்படுத்தி ஐரோப்பியத் தொழில்களுக்கு ஊக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவர் தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருந்து ஐரோப்பாவில் குடியேற முயலுபவர்களைத் தடுக்க மற்ற ஐரோப்பிய நாடுகள் மேலதிக நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், மக்கள் ஐரோப்பிய நாடுகள் இடையில் கடவுச் சீட்டு இன்றியே பயணம் செய்ய வழிசெய்யும் ஷெங்கன் விசா முறைமையிலிருந்து பிரான்ஸ் விலகும் என்றும் சர்கோஸி எச்சரித்திருந்தார்.
இடதுசாரி ஒல்லாந்த்
ஆனால் மறுபக்கம் பிரான்ஸுவா ஒல்லாந்த், இடது சாரி பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து மக்களிடம் ஆதரவு திரட்டியிருந்தார்.
பிரான்ஸின் பெரு நிறுவனங்கள் மீதும் வருட வருமானம் 10லட்சம் யூரோக்களும் அதிகமாகக் கொண்டவர்கள் மீதும் வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என்று ஒல்லாந்த் வாக்குறுதி அளித்திருந்தார்.
நாட்டில் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச ஊதியத் தொகையை அதிகரிக்கவும், பிரான்ஸ் எங்கும் புதிதாக அறுபதாயிரம் ஆசிரியர்கள் வேலைக்கு சேர்க்கப்பட வேண்டும் என்றும், சில தொழிலாளிகளுக்கு வேலை ஓய்வு வயது 62 வயதிலிருந்து 60ஆக குறைக்கப்பட வேண்டும் என்றும் தான் விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.
வாக்காளர்களைப் பொறுத்த அளவில், ஊதியம், ஓய்வூதியம், வரிவிதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பொருளாதார விடயங்கள்தான் முக்கிய தேர்தல் விவகாரங்களாக அமைந்திருக்கின்றன என்று சொல்லலாம்.
அதேநேரம் மக்களுடைய முக்கியப் பிரச்சினைகளை இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் முன்னிறுத்தவில்லை என்ற குற்றசாட்டும் பொதுவாகக் காணப்பட்டது.
ஒரு பக்கம் சர்கோஸியின் படாடோபம் மக்களுக்கு வெறுப்பைத் தந்தது என்றாலும், மறுபக்கம் ஒல்லாந்து மக்களின் கவனத்தை வசீகரிக்கத் தவறியுள்ளார்.
அதனால் மற்ற சிறிய கட்சிகள் மற்றும் கடும்போக்குவாதம் பேசும் வேட்பாளர்ககளின் குரல்களுக்கு இந்தத் தேர்தலில் சற்று அதிகமான இடம் இருந்தது என்று சொல்லலாம்.
தீவிர வலதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தும் தேசிய முன்னணிக் கட்சி வேட்பாளர் மரின் லெபென் அம்மையார், குடிவரவுக்கெதிரான தனது வாதம் மக்களிடையே மேலோங்கச் செய்திருந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற ஜான் லியுக் மெலெங்கொன், தீவிர வலது சாரி வாக்காளர்களை ஒன்றுதிரட்ட முயன்றிருந்தார்.
2007ஆம் ஆண்டு தேர்தலில் 19 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் வந்த மத்தியசாரி வேட்பாளர் பிரான்ஸுவா பெய்ரூ, இந்த தேர்தலில் மூன்றாவது தடவையாக களம் நிற்கிறார்.
பிரான்ஸ் நேரப்படி மாலை 6 மணிக்குத்தான் வாக்குப் பதிவுகள் முடிவடையும், அதிலிருந்து ஒரு சில மணி நேரங்களிலேயே வாக்கு எண்ணிக்கை விபரங்கள் வெளியாக ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.