4/26/2012

| |

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் காலமானார்!

கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் காலமானார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற கமலநாதன் அவர்கள் தமிழ் துறையில் வித்துவான் பட்டம் பெற்றவராவார்.
இவர் தமிழ் இலக்கிய ஆய்வுத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக கிழக்கு பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்திருந்தது. மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்றை தேடும் பணியில் இறங்கிய கமலநாதன் அவர்கள் பழைய ஏட்டுச்சுவடிகளை தேடி அதனை அச்சுவடிவில் கொண்டுவந்த பெருமையை பெற்றார். ஓலைச்சுவடிகளில் இருந்த வரலாற்று தடயங்களை தொகுக்கும் மிகப்பெரிய பணியில் இறங்கிய வித்துவான் கமலநாதன் அவர்களும் அவரது துணைவியார் கமலா கமலநாதன் அவர்களும் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக உருவானதே மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலாகும்.
மட்டக்களப்பில் மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்களுக்கு பின்னர் இருந்த நடமாடும் தமிழ் நூலகம் கமலநாதன் அவர்களாகும். ஆதனால்தான் கிழக்கு பல்கலைக்கழகம் அந்த வித்துவான்கள் இருவருக்கும் இலக்கிய கலாநிதி பட்டங்களை வழங்கி கௌரவித்திருந்தது.
மட்டக்களப்பு வரலாற்றைப்பற்றி பேசுவோர் எஸ்.ஓ.கனகரத்தினம் எழுதிய Monograph of Batticaloa என்ற ஆங்கில நூலையும் அவரது மருமகனான எவ்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் மட்டக்களப்பு மான்மியத்தையுமே எடுத்துக்கொள்வர். அதன் பின்னர் சரித்திரத்தை ஆதாரங்களுடன் பேசும் நூலாக வெளிவந்ததுதான் சா..கமலநாதன், கமலா கமலநாதன் ஆகியோர் ஏட்டுச்சுவடிகளிலிருந்து தொகுத்த மட்டக்களப்பின் பூர்வ சரித்திரமாகும்.