இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவினர் தமது விஜயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில், அங்கு மக்கள் மறுவாழ்வுப் பணிகளும், நீடித்து நிலைக்கக்கூடிய அமைதிக்கான வழிமுறைகளும் எந்த மட்டத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்காகவே தங்களது இந்தப் பயணம் அமைந்திருந்ததாக சுஷ்மா ஸ்வராஜ் குழுவினர் கூறியுள்ளனர்.
இந்தப் பின்னணியில், தங்களின் விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், முக்கிய கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் என பல தரப்பினரையும் தாம் சந்தித்துப் பேசியதாகவும், 30 ஆண்டுகால போரிலிருந்து மீண்டுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளித்து பயணங்களை மேற்கொண்டிருந்ததாகவும் இந்திய நாடாளுமன்ற குழுவினர் கூறியுள்ளனர்.அதேபோல நாட்டின் பல பாகங்களிலும் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் பற்றியும் நேரடியாக பார்த்துவர வேண்டுமென்றும் தாங்கள் எண்ணியிருந்ததாக சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றங்களில் முன்னேற்றத்தைக் காணமுடிந்ததாகவும், இருந்தாலும் அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் இன்னும் இடைத்தங்கல் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தான் இன்னும் இருப்பதாகவும் இந்திய நாடாளுமன்றக் குழு கூறுகிறது.
அந்த மக்களின் முழுமையான மீள்குடியேற்றத்தின் பின்னர் தான் மறுவாழ்வுப் பணிகள் பூர்த்தியடையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு, தமிழ்க் கூட்டமைப்பு, மற்றத் தரப்பினரை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை
இலங்கையில் இப்போது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்ட சூழ்நிலையில் அங்கு தேசிய இணக்கப்பாடு மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் நோக்கிச் செல்வதற்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று இந்தியா கருதுகிறது.
அதற்காக அண்மையில் நல்லிணக்க ஆணைக்குழு (எல்எல்ஆர்சி) முன்வைத்த பரிந்துரைகளுக்கு அவசரத் தேவை கருதி முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை தமது தரப்பு இலங்கைத் தரப்புக்கு எடுத்துரைத்துள்ளதாகவும் இந்திய குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோர் பற்றிய விசாரணைகள் பற்றியும் தனியார் காணிகளிலிருந்து இராணுவங்களை விலக்கிக்கொள்ளல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைத்தல் மற்றும் வடக்கில் சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்தும் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.
அந்த பரிந்துரைகளை இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டுமென்று தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உள்வாங்கக்கூடிய அர்த்த பூர்வமான அதிகார பகிர்வுத்திட்டத்தை எட்டுவதற்கு தற்போதுள்ள சூழலை இலங்கை அரசு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
13th Amentment plus- அதாவது அதிகாரப் பகிர்வு விடயத்தில் 'இலங்கை அரசியலமைப்பின் 13ம் திருத்தத்துடன் இன்னும் சில விடயங்களும் சேர்க்கப்படும்' என்ற அணுகுமுறையை ஒட்டி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என்று இலங்கை அரசு ஏற்கனவே கடந்த காலங்களில் வாக்குறுதி அளித்துள்ளதை இந்தியா இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றபல தரப்பினரும் அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய பேச்சை முன்னெடுக்க வேண்டுமென்றும் இந்திய பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளின் அடிப்படையில், அந்நாட்டின் பலதுறைகளிலும் தாங்கள் வழங்கிவரும் மனிதநேய உதவித்திட்டங்கள் குறித்து திருப்தியடைவதாகக் கூறியுள்ள இந்திய நாடாளுமன்றக் குழு, இரு நாட்டு மீனவர்களின் பிரச்சனை விடயத்தில் தான் இரு தரப்பினரும் மிக அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்றும் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.