4/11/2012

| |

சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

இந்தோனேஷியாவின் அச்சே பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து, அந்த மாகாணத்தின் கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கலாம் என்று விடுக்கப்பட்ட அதிகாரபூர்வ எச்சரிக்கையை இந்தோனேஷிய அரசு ஏறக்குறைய விலக்கிக்கொண்டு விட்டது.
அதே போல இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் விடுத்திருந்த சுனாமி எச்சரிக்கையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
புதன்கிழமை அச்சே மாகாணத்தை தாக்கிய முதல் பூகம்பம் 8.5 என்ற அளவிலானது. இது 80 செண்டிமீட்டர் உயரமான அலைகளை உருவாக்கினாலும், பெரிய அளவு சேதத்தை ஏற்படுத்தவில்லை.
ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர் ஏற்பட்ட இரண்டாவது பூகம்பம் 8.3 அளவு கொண்டது.
இலங்கையிலும் அச்சத்தில் மக்கள் வெளியேறினர்
இந்தோனேஷியாவின் அச்சே மாகாணத் தலைநகரான பண்டா அச்சேவுக்கு சுமார் 495 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த முதல் பூகம்பத்தாக்குதலின் மையம் இருந்தது என்று அமெரிக்க நிலவியல் கழகம் தெரிவிக்கிறது.
ஆனால் இந்தப் பூகம்பத்தின் விளைவாக பெரிய அளவு பொருட்சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
2004ம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக அச்சேயில் மட்டும் 1, 70,000 பேர் கொல்லபட்டார்கள். இலங்கை இந்தியா உட்பட பிற அண்டை நாடுகளில் 2,50,000 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட நில அதிர்வுகள் சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டன.
சுனாமி அச்சத்தால் கொழும்பில், வீட்டிலிருந்து வெளியேறி நாயுடன் சாலையோரத்தில் ஒரு பெண்
இந்திய இலங்கை அரசுகளும் இந்த பூகம்பத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கைகளை வெளியிட்டன.
இந்தியா, தனது கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் , ஆறு மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பலாம் என்று கூறியது.
இலங்கையும் முதலில் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை பின்னர் விலக்கிக் கொண்டது.
இந்த எச்சரிக்கை விலக்கிகொள்ளப்பட்டாலும், வீடு திரும்பலாம் ஆனால் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.