4/23/2012

| |

கிழக்கு பல்கலைக்கழத்திற்க்கு உதவி வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது- உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக இந்தியப் பாராளுமன்றக்குழுவின் முக்கியமானவரான சுதர்சன நாச்சியப்பன் உறுதியளித்துள்ளதாக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலைக்கு வருகை தந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனுடன் தான் நடத்திய கலந்துரையாடலிலேயே இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளதாக கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த உபவேந்தர்,
யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளிலும் கிழக்குப் பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதி பல்கலைகழகத்தின் அபிவிருத்திக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குரிய நிதி வசதிகளை, கட்டட வசதிகளை இந்தியா ஏற்படுத்தித் தர வேண்டும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு அழகியல் கற்கைப்பிரிவின், கிழக்குப் பல்கலைக்கழத்தின் விபுலானந்தர் இசைநடனக் கல்லூரியை அபிவிருத்தி செய்வதற்கும், அதன் தரத்தினை உயர்த்துவதற்கும் ஏற்பாடுகள் உதவிகள் செய்து தரவேண்டும்.
அதே நேரம் இந்தக் கற்கைப்பிரிவினை இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைத்தல், புதிய கற்கைப் பிரிவுகளை ஆரம்பித்தல், ஆசிரிய வளப்பங்கீடு, இங்குள்ளவர்களுக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என சுதர்சன நாச்சியப்பனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த அவர், இவ்விடயங்கள் தொடர்பான அறிக்கையினை தனக்கு மிக விரைவாக கையளிக்குமாறும், அதன் பிரதியினை இந்திய உயர்ஸ்தானிகருக்கும் கையளிக்குமாறும் தெரிவித்ததுடன், இக் கோரிக்கைகளைத் தான் உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார் எனவும் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பாராளுமன்றக் குழு கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தது. அவ்விஜயத்தில் மட்டக்களப்பு வந்தாறுமூலை தொழில் பயிற்சிக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.